ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையோரம் 108 வைணவ திவ்யதேசங்களில் சிறப்புபெற்ற நவதிருப்பதி திருக்கோவில்களில் ஒன்பதாவது ஸ்தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டிற்கான சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி பொலிந்துநின்றபிரான் திருவீதி உலா வருதல் நடைபெற்றது. 5 ஆம் திருவிழாவில் சுவாமி பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்றைய தினம் நடந்தது. இதற்காக அதிகாலை சுவாமி பொலிந்துநின்ற பிரான் திருத்தேரில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து திருத்தேரை பக்தர்கள் கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் கீழரதவீதி, மேலரதவீத, வடக்கு ரதவீதி மற்றும் தெற்கு ரத வீதி வழியாக மீண்டும் கோவில் முன்பு வந்தடைந்தது.
நாளை தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர், தக்கார், உபயதாரர்கள் மற்றும் ஊ£¢மக்கள் செய்து வருகின்றனர்.


