ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சிவப்பு சாத்தி திருக்கோலத்தில் நடராஜருக்கு எதிர்சேவை காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் ஸ்வாமி ஶ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே கொற்கை பகுதியை ஆட்சி செய்து கோமாரவல்லப பாண்டியன் என்ற பாண்டிய மன்னரால் ஆகம விதிப்படி நிர்மாணிக்கப்பட்ட ஆலயமாகும். பிற்காலத்தில் இந்த திருக்கோவில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தாலும், விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களாலும் இந்த ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
நிறைவாக இராஜபாளையம் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தாரால் இராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட்டது. இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவம் மிகவும் பிரபலமானது. இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த மே மாதம் 4ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சிறப்பு வழிபாடும், பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சமுக விநாயகர் புறப்பாடு நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது.
முன்னதாக காலையில் யாகசாலை பூஜையும், விநாயகர், சுப்ரமணியர், பஞ்சமுக விநாயகர், நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் பஞ்சமுக விநாயகர் உருகு சட்டசேவையும், ஆறுமுகமங்கலம் செந்திவிநாயகர் சத்திரம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற்றது. மதியம் 02:00 மணியளவில் ஆறுமுகமங்கலம் செந்திவிநாயகர் சத்திரத்தில் பஞ்சமுக விநாயகர் சிவப்பு சாத்தி அபிஷேகமும், மாலை 07:00 மணியளவில் பஞ்சமுக விநாயகர் ருத்ர அம்ச சிவப்பு சாத்தி திருக்கோலத்தில் நடராஜருக்கு எதிர்சேவை காட்சி கொடுக்கும் வைபவமும், தீபாராதனையும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை சத்தியஞான தரிசினிகள் சந்தானம் செங்கோல் ஆதீனம் 103வது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்து பக்தர்களுக்கு ஆசியுரை வழங்கினார்கள். சிவாச்சார்யார்களின் வேத மந்திர கோஷம் ஒலிக்க, ஓதுவாமூர்த்திகளின் திருமுறை பாராயணம் நடைபெற, நாதஸ்வர இன்னிசை இசைக்க, சிவனடியார்களின் கயிலாய வாத்தியம் முழங்க பஞ்சமுக விநாயகர், நடராஜர் ஒருசேர ஆறுமுகமங்கலம் − கொட்டாரக்குறிச்சி கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்று வெள்ளை சாத்தி மண்டகப்படியில் சேர்க்கை நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர் ஆறுமுகமங்கலம் செந்தி விநாயகர் சத்திரம் அறக்கட்டளை தலைவர் ஆறுமுகமங்கலம் சேகர் ஐயர், நடராஜர் சிவப்பு சாத்தி மண்டகப்படிதாரர் கொட்டாரக்குறிச்சி மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ஆறுமுகமங்கலம் ஸ்வாமி ஶ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் தேவஸ்தான பூஜா ஸ்தானீகர் விக்னேஷ்வர பட்டர் மற்றும் திருவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


