ஸ்ரீவைகுண்டம் உறவினரிடம் தகராறு செய்து உறவினரின் இருசக்கர வாகனத்தை தீயிட்டு எரித்தவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், தெப்பகுளம் தெருவை சேர்ந்த கார்த்திக் மகன் மாயாண்டி (40) என்பவரும், வெள்ளூர் கணியன்குடி பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கம் மகன் அம்மமுத்து (24) என்பவரும் உறவினர்கள் ஆவர். இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இதன்காரணமாக மாயாண்டி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அம்மமுத்து அவரிடம் தகராறு செய்து அங்கு நிறுத்தி வைத்திருந்த அவரது இருசக்கர வாகனத்தை தீயிட்டு எரித்துள்ளார். இதனால் மாயாண்டி அம்மமுத்துவை சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்த அம்மமுத்து மாயாண்டியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மாயாண்டி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேவியர் பிராங்க்ளின் வழக்குப்பதிவு செய்து மேற்படி எதிரி அம்மமுத்துவை கைது செய்தார்.


