நன்றி நெல்லை டைம்ஸ் நாளிதழ் மற்றும் பொறுப்பாசிரியர் திரு தம்பான் அவர்கள்.
கடனாநதி என்பதும் தாமிரபரணியின் துணை நதிதான். அத்ரி மலை முகட்டில் தோன்றி கல்லாறு என்ற பெயருடன் கரைபுரண்டு ஓடி கடனா நதியை உடன் சேர்த்து பல ஊர்களை செழிமையாக்கி விட்டு திருப்புடை மருதூரில் தாமிரபரணி நதியில் வந்து சேருகின்ற சிறப்பான நதி. இந்த நதிக்கரையில் தான் மலை முகட்டில் மரத்தில் பன்னீர் மழை பொழிகிறது. ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் இருந்து கடனா அணைக்கட்டு சென்று அங்கே நமது வாகனங்களை நிறுத்தி விட்டு , வனத்துறையிடம் நமது ஆதார் கார்டை கொடுத்து பதிவு செய்து விட்டு நடைபயணத்தினை தொடங்க வேண்டும். முற்காலத்தில் எப்போது வேண்டும் என்றாலும் அத்ரி மலை சென்று வரலாம். தற்போது வனத்துறை அனுமதி இன்றி செல்ல இயலாது. மீறி சென்றால் அபதாரம் விதிக்கப்படும். ஜெயில் தண்டனையும் உண்டு. எனவே விதி மீறி முயற்சிக்க வேண்டாம். குறிப்பாக அமாவாசை பௌர்ணமி போன்ற காலங்களில் இங்கு செல்ல அனுமதி உண்டு. எனவே வனத்துறை ஒத்துழைப்புடன் அவர்களுக்கு கட்டவேண்டிய கட்டணத்தினை கட்டி விட்டு பயணத்தினை மேற்கொள்ளவேண்டும். இந்த மலை காடு முழுவதுமே மிகப் பெரிய நோயையும் தீர்க்கும் மூலிகைவனமாக விளங்குகிறது.
அத்ரியில் தென்றல் பல மூலிகைகளின் சக்திகளையும் கலந்துதான் நம்மைத் தழுவிச் செல்கிறது. ஏனெனில், அருகிலுள்ள குற்றால மலையில் 2500க்கும் மேற்பட்ட மூலிகைகள் உள்ளன என்று மேலை நாட்டு அறிஞர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அதுபோலவே இந்த அத்ரியிலும் மூலிகைகள் பல உள்ளன.
அத்ரியின் பயணத்திற்கு இரண்டு வழிகள் காணப்படுகிறது. மழையில்லாத காலத்தில் கடனா அணைக்கட்டு வறண்டிருக்கும். அந்தச் சமயத்தில் கடனா அணைக்கட்டின் உள்ளேயிருக்கும் வழியாகவே அத்ரி மலைக்குச் செல்லலாம். இந்தச் சமயத்தில் 2 கி.மீ. தூரம் பக்தர்களுக்குக் குறைய வாய்ப்புள்ளது. ஆனால், மழை பெய்து கடனா நதி நிறைந்து விட்டால், கடனா அணைக்கட்டின் கரை வழியாகவே 2 கிலோ மீட்டர் கூடுதலாக நடந்து அத்ரி மலைச் செல்லவேண்டும். இந்தப் பகுதிதான் மூலிகை வளங்கள் நிறைந்ததாகும்.
விஷ்ணு கிரந்தை என்னும் ஒரு மூலிகைச் செடி இங்குண்டு. விஷக் காய்ச்சலை உடனே குறைக்கும் சக்தி பெற்றது. குணப்படுத்த முடியாத காய்ச்சலை விஷ்ணு கிரந்தை எளிதாகக் குணப்படுத்தும். அடுத்து, அம்மான் பச்சரிசி: இது தாய்மைப்பேறு பெற்ற பெண்ணுக்குத் தாய்ப்பால் சரியாக சுரக்கவில்லை எனில் இதை அரைத்துக் குடிக்கக் கொடுப்பார்கள். தாய்க்கு நன்றாக பால் சுரக்கும். சஞ்சீவி மூலிகை, இதயநோயைக் குணப்படுத்தும். கைலாய மலைக்குச் செல்ல விரும்பிய இதய நோயாளியான முதியவர் ஒருவர் இங்கிருந்து சஞ்சீவி மூலிகையைப் பறித்துக்கொண்டு சென்றாராம். ஏற்கெனவே மருத்துவர் அவரைக் கைலாய மலைக்கு போகவேண்டாம் என்று தடுத்துள்ளனர். ஆனாலும் மீறிச்சென்றார். அங்குச் சென்றபோது அவருக்கு இதயவலி எடுத்துள்ளது. உடனே சஞ்சீவி மூலிகையை உட்கொண்டார்; இதயவலி நின்றுவிட்டது! மிகவும் ஆரோக்கியமான உடல்நலத்தோடு கைலாய தரிசனம் முடித்து விட்டு, மீண்டும் அத்ரிமலைக்கும் அவர் வந்திருக்கிறார்.
சர்க்கரை வேம்பு என்றொரு மூலிகை மூலம், கல்லடைப்பு போன்ற தீராத நோய்களைத் தீர்க்கவல்லது, வலம்புரி காய், இடம்புரி காய் என்று இரு காய்கள் உள்ளன. இந்தக் காய்களை ஹோமகுண்டலத்தில் இடும்போது நல்ல மணத்துடன் எரியும். அதிலிருந்து வெளிவரும் புகையும், நறுமணமும் சுவாசப் பிரச்னைகளைத் தீர்க்கும் சக்தி பெற்றவை. புளிஆரை என்னும் மூலிகை உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கக் கூடியது. புளி சேர்த்தால் வாதம் வரும் என்பார்கள். தக்காளி சேர்த்தால் ஊரல் வந்துவிடுமென்று சிலர் தக்காளியைத் தவிர்ப்பார்கள். ஆனால், புளிஆரை என்னும் மூலிகை புளிப்புச்சுவை கொண்டிருந்தாலும், வாதம் மற்றும் ஊரல் நோய்களையும் நீக்கும் தன்மை பெற்றது. நாராயண சஞ்சீவி, உடல் இளைப்பைக் குறைக்கும்.
தென்றலாடும் பாவை என்றொரு மூலிகை செடி இங்குள்ளது. இந்த செடி விஷத்தை முறித்துவிடும். ஆரோக்கியப் பச்சிலை உடலை உறுதியாக்கி, எதிர்ப்புச் சக்தியை வளர்க்கும். அழுகண்ணி, தொழுகண்ணி மூலிகைகளை முறையாகப் பயன்படுத்தினால் முதுமையே தெரியாதாம். மேலும், இருமுக ருத்ராட்சமும் இங்குதான் கிடைக்கிறது. பெரும்பாலும் நேபாளத்தில்தான் ருத்ராட்சம் கிடைக்கும் என்பார்கள். ஆனால், பொதிகையிலும் அத்ரியிலுமே இருமுக ருத்ராட்சம் கிடைக்கிறது எனும் தகவல் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. அதுசரி, இந்த மூலிகையைப் பறித்துச் சாப்பிட்டால் நோய் தீர்ந்துவிடுமா?
இந்த மூலிகைகளைப் பறித்துச் சாப்பிட வேண்டும் என்பதில்லை. மாறாக அத்ரி வனத்திற்குத் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தாலே போதும், அந்த மூலிகைகளின் காற்று பட்டு நாள்பட்ட நோய்கள் தாமாகத் தீர்ந்துவிடும். சர்க்கரை நோய் கூட சிட்டாய் பறந்துவிடும். ஆஸ்துமா போன்ற இளைப்பு நோய் இருக்குமிடம் தெரியாமல் மறைந்து விடும்.
இந்த மூலிகைகளெல்லாம் எங்கிருக்கின்றன என்பதை மூலிகை ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே அறிவார்கள். அரைகுறையாகத் தெரிந்து கொண்டு நாம் பறித்து உண்பது அபாயகரமானது. இவையெல்லாம் இம்மலையில் இருக்கின்றன என்பது செய்திதானே தவிர, உபயோகப்படுத்துதல் என்று வரும்போது, மூலிகை நிபுணர்களைக் கொண்டுதான் ஆய்வு செய்யவேண்டும். யாத்திரையாக வருபவர்கள் இங்குள்ள செடிகளை இதுதான் அந்த மூலிகை, இந்த மூலிகை என்று நினைத்து கிள்ளிச் சாப்பிட்டுவிடக்கூடாது. சில மூலிகைகளைப் பயன்படுத்தும்போது சில பத்தியங்களையும் மேற்கொள்ள வேண்டும். புகையிலை போடக் கூடாது, புலால் உண்ணக்கூடாது, மது அருந்தக் கூடாது என்பது மாதிரி கட்டுப்பாடு உண்டு. நாம் நடந்து செல்லும்போது நம்மை அறியாமலேயே மூலிகைக் காற்றை நெஞ்சு நிறைய சுவாசிப்பது என்பதே போதுமானது. அத்ரி மகரிஷியை நினைத்துக்கொண்டே மலையேறி இறங்கினாலே போதும், நம் உடம்பு பரிபூரணமாக ரீசார்ஜ் செய்யப்பட்டுவிடும்!
இது ஒருபுறம் இருக்க. இந்த மலை முழுவதுமே அரூபமாகச் சித்தர்கள் வியாபித்திருக்கிறார்கள். ஏதேனும் ஒரு ரூபத்தில் தவம் புரிவார்கள். எனவே, மூலிகைகளைத் தேடிச் சென்று நாம் அவர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது. மலையினை அசுத்தமாக்கக்கூடாது. அவ்வாறு மூலிகைகளைத் தேடுவதற்கும் சில நியமங்கள், ஆசார அனுஷ்டானங்களை மேற்கொள்ள வேண்டும். தற்போது வனத்துறை கட்டுப்பாடு கடுமையாக இருப்பதால் இதுபோன்ற விஷப்பரிட்சையில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வனத்துறையினர் மூலிகை பறிப்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள்.
அத்ரிமலை சகல ரிஷிகளையும் ஈர்க்கும் மலையாகும். தமிழகத்திலிருந்து சீனாவிற்குச் சென்று அங்கே தற்காப்புக் கலையைக் கற்றுக் கொடுத்த மாபெரும் ரிஷியான போதிதர்மரும் அத்ரி மலைக்கு வந்திருக்கிறார். அருகில் உள்ள குற்றால மலை பரதேசி புடையில் தவமிருந்திருக்கிறார்.
தனது சிஷ்யர் கோரக்கருக்காக இங்கு கங்கை ஒன்றை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார் அத்ரி மகரிஷி. இந்த கங்கை தரை மட்டத்தில் இருந்தும் கூட ஊற்று ஊறி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. இது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். பக்தர்கள் இதை தீர்த்தமாக நினைத்து குளித்து, வீட்டுக்கு தீர்த்தமாக எடுத்து வருகிறார்கள். இதுபோன்ற பல்வேறு ஆச்சரியங்கள் அத்ரி மலையில் உள்ளது. முழுமையாக தெரிந்து கொள்ள நான்(முத்தாலங்குறிச்சி காமராசு) எழுதி தினகரனில் தொடராய் வெளிவந்து, சூரியன் பதிப்பகம் மூலமாக நூலாக வெளிவந்த “அத்ரி மலை யாத்திரை” என்ற நூலை வாங்கி படியுங்கள். முழுத்தகவலும் உங்களுக்கு கிடைக்கும்.
சித்திரை மாதத்தில் அபூர்வ மழை பொழியும் மரங்கள் இரண்டு இங்குள்ளன. ஆம், பன்னீர் மழை பொழியும் அதிசய மரங்கள் அவை!
ஒன்று விநாயகர் அருகிலும், மற்றொன்று அத்ரி, அகத்திய மாமுனிவர் சிலைக்குப் பின்புறமும் உள்ளது. விநாயகர் சிலை அருகேயுள்ள மரம், வானுயர நிற்கிறது. அடர்ந்து காணப்படும் இந்த மரத்தினைப் பாலைமரம் என்று கூறுகிறார்கள். மிகப்பழமையான மரம். அந்த மரத்தினைக் காயப்படுத்தக்கூடாது என்பதில் பக்தர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.
லேசாக மரத்தைக் காயப்படுத்தினாலே பால் வடியும். கடுமையான கோடை காலத்தில் பங்குனி கடைசி ஐந்து நாட்களும், சித்திரை முதல்
ஐந்து நாட்களும், மொத்தம் பத்து நாட்கள் ஆயிரக்கணக்கான வண்டுகள் மரக்கிளையின் மேலிருந்து தன் உடம்பிலுள்ள சுரப்பிகள் மூலம்
நீரைப் பீய்ச்சி அடிக்கிறது. கீழிருந்து பார்த்தால் அந்த வண்டுகள் நமக்குத் தெரியாது. மரத்திலிருந்து மழைபெய்வது போலவே தோன்றும். இதுவே இறைச்செயல்தான். இங்கு வண்டு இருக்கிறதோ. அல்லது மரமே பன்னீர்த் தூறலாய்பொழிகிறதோ. ஆனால், இறை ஆணை இல்லாமல் இதுபோன்ற காரியம் நடைபெறாது என்பது மட்டும் உண்மை.
இந்த மரத்தினை அமிர்தவர்த்தினி மரம் என்கிறார்கள். அதாவது, அமிர்தத்தைத் தரக்கூடிய மரம். ஆஹா. பாற்கடலில் அமுதம் கடைந்தெடுக்கத் தேவர்கள் எவ்வளவு பாடுபட்டார்கள். அதுபோல எந்தப் பாடும் நாம் படவில்லையே. தேவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் அமிர்தத்தினை யாவரும் பெறக்கூடிய ஒரே இடம் அத்ரிமலையே. இங்கு அமிர்தம் பன்னீர் மழையாகப் பொழிகிறது.
இதற்காகவே பக்தர்கள் மரத்தின் அடியில் காத்திருப்பர். இந்த மழையை உணரமுடியும். மணம் இருக்காது. நிறம் இருக்காது. நமது மீது பட்ட நொடியிலேயே மறைந்து விடும். ஆனாலும், மருத்துவகுணம் நிறைந்தது. சிலர் கூறுவது போல, மரத்தில் எழுதி வைத்திருப்பது போல, வண்டுகள் பீய்ச்சியடிக்கும் நீர் என்று இதை கூறிவிடமுடியாது என்பது பல பக்தர்களின் கருத்து. ஆனால் வண்டுகள் தான் இந்த திரவத்தினை பிச்சியடிக்கிறது. கோடை காலத்தில் மட்டும் குறிப்பிட்ட நாட்களில் கண்ணுக்குத் தெரியாத வண்டுகள் இந்த மரங்களில் தங்குகிறது என்றால் அதுவும் அதிசயமே.
நான் எனது குடும்பத்துடன் 18.04.2014 அன்று அத்ரிமலை சென்ற போது பன்னீர் மழையை உணர்ந்தேன். எனது வீடியோ கமராவை மிக அருகில் வைத்து படம் பிடித்த போது அதில் வண்டுகள் இருந்ததும், அந்த வண்டுகளில் இருந்து பன்னீர் மழை பிச்சியடிப்பதையும் பார்த்தேன், அதை பதிவு செய்தேன். மூன்றாவது கண் என்ற வேந்தர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்த பன்னீர் மழை பிச்சியடிப்பதை பதிவு செய்தோம். தற்போதும் நீங்கள் யூ டியூப்பில் அதை பார்த்து மகிழ்ச்சி அடையலாம்.
8 வருடம் கழித்து வானொலி அறிவிப்பாளர் அருமை சகோதரி சுபகலா குடும்பத்துடன் 16.04.2022 ல் அத்ரி மலை சென்ற போது இந்த பன்னீர் மழையை உணர்ந்து இருக்கிறார். அவர் என்னிடம் இதைப்பற்றி பேசியிருக்கிறார்.
வண்டுகளே இதற்கு காரணம் என்றாலும் அங்கு எத்தனை பாலை மரங்கள் உள்ளன. அந்த பாலை மரத்தில் எல்லாம் வண்டுகள் இல்லையே கோயில் முன்புள்ள இரண்டு மரத்தில் மட்டுமே வண்டுகள் தங்கி பன்னீர் மழை பொழிவது அதிசயம் தானே. மிகப்பெரிய ரகசியம் தானே. இந்த பொருநை தாயின் மடியில் மட்டும் தான் அதிசயம் நிகழ்கிறது என்றால் அவளின் துணை நதியான கடனா நதிககரையில் இதுபோன்ற அதிசயம் நிகழ்கிறதே-.
இது மட்டுமா?
தாமிரபரணிக் கரையில் பாபநாசத்தில் கல்யாண தீர்த்தம் அருகே கோடிலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்குத் தமிழ் மாத பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சந்தன மழை பொழிகிறது. அருகில் மரங்கள் எதுவும் இல்லை. ஆனால், எங்கிருந்து சந்தன மழை பொழிகிறது என்று தெரியவில்லை. ஆனால், பொழிகிறது. இந்த வாய்ப்பு அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு மட்டுமே உணர முடியும். அந்த பயணத்திலும் நாம் ஈடுபட்டோம். அதுவும் மிகப்பெரிய ரகசியம் தான்.
(பொருநை ரகசியத்தினை தேடி பயணிப்போம்)


