நாசரேத் அருகே அரசுப் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீா் மயக்கம் ஏற்பட்டது. அவா் உரிய நேரத்தில் பேருந்தை நிறுத்தியதால் பயணிகள் தப்பினா்.
தூத்துக்குடி, பத்ரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அய்யன் பெருமாள் மகன் பாலசுப்பிரமணியன் (43). அரசுப் பேருந்து ஓட்டுநா். இவா், தூத்துக்குடியிலிருந்து நாசரேத் வழியாக சாத்தான்குளம் செல்லும் பேருந்தில் நேற்று வெள்ளிக்கிழமை பணியில் இருந்தாா். நடத்துநராக எட்டயபும் அழகுராம் (48) பணியாற்றினாா். அந்தப் பேருந்து பிரகாசபுரத்துக்கு வந்தபோது, ஓட்டுநருக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டதாம்.
உடனே, அவா் பேருந்தை ஓரமாக நிறுத்திய நிலையில் மயங்கி விழுந்துள்ளாா். அவருக்கு மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதில், ரத்த அழுத்ததால் மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனா். உரிய நேரத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய அவரை,பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.


