நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று இந்தியா சார்பில் காமன்வெல்த் போட்டி உள்பட மூன்று போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்த மாணவர்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான்சன் & எஸ்தர் செல்வராணி தம்பதியினர். ஜான்சன் முதலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற எஸ்.ஜே.மஸ்கோத் அல்வா கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு மூன்று மகன்கள். இதில் முதல் மகன் ஜெஸ்வின் ஆல்ட்ரின். இவர் தான் நீளம் தாண்டுதலில் சிறு வயதில் இருந்தே ஏராளமான பதக்கங்களை வென்று குவித்துள்ளார்.
20 வயதான ஜெஸ்வின் ஆல்ட்ரின் தற்போது சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ படித்து வருகிறார். இவரின் நீளம் தாண்டுதலில் சிறந்து விளங்கிய காரணத்தினால் கர்நாடகாவைச் சேர்ந்த ஜேஎஸ்டபிள்யூ என்ற நிறுவனம் அவருக்கு ஸ்பான்சர் செய்து தனியாக பயிற்சி அளித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இந்திய அளவில் நடந்த நீளம் தாண்டுதல் போட்டியில் 40 பேர் பங்கேற்றனர். இதில் 8.37 தூரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். அதோடு மட்டுமல்லாமல் இந்த சாதனையை இந்திய அளவில் முதலிடமாக கருதப்படுகிறது.
இந்த வெற்றி காரணமாக இவர் இந்தியா சார்பில் இந்தாண்டு நடைபெற உள்ள காமன்வெல்த், வேல்டு சேம்பியன் ஷிப், ஏசியன் கேம் ஆகிய மூன்று விளையாட்டுப் போட்டிகளிலும் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, எனக்கு சிறு வயது முதலே நீளம் தாண்டுதலில் ஆர்வம் இருந்த காரணத்தினால் நான் பல்வேறு போட்டிகளில் வென்று பதக்கங்கள் பெற்றுள்ளேன். கடந்த மூன்றாம் தேதி நடந்த போட்டியில் பங்கேற்று 8.37 தூரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றுள்ளேன். மேலும் இந்தியா சார்பில் இந்தாண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டி, ஏசியன் கேம் மற்றும் வேல்டு சேம்பியன் ஷிப் கேமிலும் பங்கேற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளேன். அனைத்திலும் பதக்கம் வென்று, மேலும் 2024 ம் வருடம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியா சார்பில் பங்கேற்று பதக்கம் வெல்வதே தன்னுடைய இலக்கு என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவரது தந்தை ஜான்சன் கூறுகையில், என்னுடைய மகன் சிறுவயதில் இருந்தே நீளம் தாண்டுதல் போட்டியில் சிறந்து விளங்கி வருகிறார். தற்போது நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் வருகின்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று நிச்சயம் பதக்கம் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.


