தவழ்ந்து வரும் தாமிரபரணி ஒர் அற்புதமான நூல்! தரவுகளை நீங்கள் சேகரிக்க மிகுந்த உழைப்பையும் காலத்தையும் செலவழித்து இருக்க வேண்டும். பழந்தமிழ் பாடல்கள், சங்க இலக்கியங்கள் இவை எல்லாவற்றிலும் உங்கள் கரங்களும் கண்களும் பதிந்திருக்க வேண்டும் என்பதற்கு நூல் முழுவதும் பல சான்றுகள் விரவிக் கிடக்கின்றன. நானும் நெல்லையைச் சேர்ந்தவனே. எங்கள் ஊர் ஶ்ரீவைகுண்டம். ஆனால் பிறந்தது வாழ்ந்தது வாழ்வது எல்லாம் சென்னையில்தான். எனக்கு இப்பொழுது 88 வயது ஆகிறது. இதில் வெறும் 8 ஆண்டுகள் மட்டுமே நான் பாளையங்கோட்டையில் என் பெற்றோருடன் வாழ்ந்தேன். ( 1940-1947 )பாளையில் நாங்கள் குடி இருந்த Danial Thomas பங்களா இன்னமும் இருக்கிறது. அங்கு இப்பொழுது ஏதோ ஒரு அலுவலகம் உள்ளது. எங்கள் அடுத்த வீட்டில் தான் சிங்கம்பட்டி ஜமீன்தாரின் பல குடும்பங்களில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. ஆனால் அந்த இல்லம் இப்போது இடிக்கப் பெற்று அங்கு ஒரு தனியார் பள்ளிக்கூடம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இனி, இந்தப் பதிவின் நோக்கத்திற்கு வருகிறேன். உங்கள் நூலில் எங்கள் ஊர் ஶ்ரீவைகுண்டம் பற்றி எழுதும் போது அங்கு உள்ள பெருமாள் கோயில் பற்றியும் அதன் மூலவர் பற்றியும் குறிப்பிட்டு உள்ளீர்கள். அதில் ஒரு சிறிய பிழை. அதனை நீங்கள் அடுத்த பதிப்பில் இணைத்துக் கொள்ளலாம் என்பதற்காகவே இதனை எழுதுகிறேன். எங்கள் கோயில் 108 திவ்ய தேசத்தில் முதலாவதாக வைத்து எண்ணப் படுவது வரை உண்மை. ஆனால், அங்கே உள்ள மூலவரின் திருப்பெயர் வைகுண்டபதி என்பதாகும். உற்சவர் பெயர்தான் கள்ளப்பிரான் என்பது. அங்குள்ள சிவன் கோயிலைப் பற்றியும் குறித்து உள்ளீர்கள். ஆனால் அது அமைந்துள்ள கைலாசபுரம் பகுதியில்தான் பெரும் புலவர் குமரகுருபர அடிகள் அவதரித்தார் என்பதைச் சொல்லாமல் விட்டு விட்டீர்கள். இந்த இரண்டு செய்திகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரவே இந்த நீண்ட பதிவினை எழுத வேண்டி வந்தது.உங்கள் நேரத்திற்கு நன்றி!
வாழிய நலம்!
அன்புடன் திருமலை.


