மெஞ்ஞானபுரம் அருகே ரேடியோ செட் அமைப்பாளரின் லேப்டாப் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் கைலாசபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஞானராஜ் மகன் கோயில்ராஜ் (40). இவர் நேற்று முன்தினம் இரவு மெஞ்ஞானபுரம் பகுதியிலுள்ள தேவாலய திருவிழாவில் ரேடியோ செட் அமைத்து அதன் பொருட்களை ஆலயத்திற்குப் பின்னால் பொருட்கள் வைத்திருக்கும் அறையில் வைத்து வேலை பார்த்துவிட்டு அறைக்கு வெளியே படுத்துள்ளார். இதனையடுத்து நேற்று காலை எழுந்துள்ளார்.
அப்போது அந்த அறையில் வைத்திருந்த லேப்டாப் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து கோயில்ராஜ் அளித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயதாஸ் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் தெற்கு கள்ளிகுளம் கல்யாணசுந்தரம் மகன் சிவக்குமார் (26) என்பவர் லேப்டாப் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிவகுமாரை கைது செய்து அவரிடம் இருந்து, லேப்டாப்பை கைப்பற்றினர்.


