திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் 2 ஆண்டுகளுக்குப் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 10-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் காலை 6.30 மணியளவில் கோலாகலமாக தொடங்கியது.
முதலில் விநாயகர் தேர், 2-வது சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளும் பெரிய தேர், 3-வது தெய்வானை அம்பாள் எழுந்தருளும் தேர் என மூன்று தேர்களும் தனித்தனியாக வெளிவீதி நான்கிலும் பவனி வரும் காட்சி கண்களை கொள்ளை கொண்டது. கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பின் இன்று தேரோட்டம் நடைபெறுவதால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர். அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


