நாசரேத் பேரூராட்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., பிரச்சாரம் மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ஊர்வசி அமிர்தராஜ் பிரச்சாரம் செய்தார். நாசரேத் பேருந்து நிலையம் அருகில் அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது: நாசரேத் பேரூராட்சியில் நாசரேத் பேரூராட்சியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் இப்பகுதியை மேம்படுத்த வசதியாக இருக்கும்.
தமிழக முதல்வர் மூலம் அரசு கொண்டு வரும் திட்டங்கள் நமக்கு வந்து சேரும். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்பி ஆகியோர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் ராகுல் நாசரேத் பகுதி மக்களை மறக்கவில்லை. நாசரேத் பகுதியை உயரத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் செயல்பட்டு வருகிறார்.
என்னை பார்க்கும் போதெல்லாம் நாசரேத் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று அடிக்கடி என்னிடம் கேட்டுள்ளார். எனவே திமுக கூட்டணி வெற்றி பெற அனைவரும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து அமோகவெற்றியை தரவேண்டும் என்று பேசினார். தேர்தல் பிரச்சாரத்தின் போது நாசரேத் திமுக நகர செயலாளர் ரவி செல்வக்குமார், காங்கிரஸ் நகர தலைவர் சந்திரன் உட்பட திமுக காங்கிரஸ் மதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.