இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் போக்குவரத்துதுறை மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகன பேரணியினை மாவட்ட ஆயுதப்படை முன்பு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 2021ஆம் ஆண்டில் சாலை விபத்துக்கள், உயிரிழப்புகள் சற்று குறைந்துள்ளது. 2022ம் ஆண்டில் இதனை மேலும் குறைப்பதற்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இருசக்கர வாகனத்தில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். இரு சக்கர வாகனத்தில் 3பேர் செல்வதை தவிர்க்க வேண்டும். அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.
மாஸ்க் அணியாதவர்களுக்கு அபாரதம் விதிக்கப்படும். கோவில்பட்டியில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 2பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுடன் தொடர்பில்இருந்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் பாதிப்பிற்காக யாரும் சிகிச்சை பெறவில்லை. தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக ஜனவரி 3ம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.


