இந்திய தேவசபையின் பிஷ்ப் டைட்டஸ் ஞானசித்தர். இவர் பாளையங்கோட்டை தெற்கு வெட்டியபந்தியில் கிறிஸ்தவ மத போதகம்செய்து வருகிறார். அரசாங்க திருமண பதிவாளர், முதியோர் உள்ளம் நடத்துவது, இலவச ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்தது, நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்குவது என ஓசைப்படாமல் பல நல்ல உதவிகளையும் செய்து வருகிறார். இவர் தற்போது நூலாசிரியராக உருவெடுத்துள்ளார். இவர் இதுவரை 278 திருமணங்களை நடத்தியிருக்கிறார். அதன் அனுபவத்தினை கொண்டு “பரிசுத்த விவாகமும், கிறிஸ்தவ குடும்பமும்” என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதினார். இந்த நூலை சரியான நேரத்தில் வெளியிட வேண்டும் என காத்திருந்தார். கடந்த 6 ந்தேதி அவருடைய மகன் பெஸ்டஸ் ஜெயமோன்- டாக்டர் ஜெபா டெல்பின் திருமணம் பாளை கிருஷ்ணாபுரம் பாலன் மகாலில் நடந்தது . அந்த திருமண விழாவில் இந்த நூலை வெளியிட்டார். இந்த நூலை தமிழ்நாடு இந்திய பூரண சுவிசேஷ தேவசபை மாநில ஒவர்சியர் பிஷப் ஞானதாஸ் வெளியிட மணமக்கள் பெற்று கொண்டனர். பிஷப் டைட்டஸ் ஞானசித்தர் மனைவி ரேச்சல் ஜெரினா உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு நூலை அறிமுகம் செய்தார். நூலுக்கு அணிந்துரை எழுதிய கோயம்புத்தூர் இராமநாதபுரம் தமிழ்நாடு வேதாகமக்கல்லூரி இயக்குனர் பிஷப் டேனியல், பாளையங்கோட்டை தூயயோவன் மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியர் கோயில் மணி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் ஷாலினி புனிதவர்தனி, சாயர்புரம் இந்திய பூரண சுவிசேஷ தேவசபை பாஸ்டர் தனராஜ் உள்பட முக்கிய பிரமுகர்கள் கௌரவிக்கப்பட்டனர். எழுத்தாளர் பிஷப் டைட்டஸ் ஞானசித்தர் ஏற்புரை வழங்கினார்.


