பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எந்த பிரச்சனை நேர்ந்தாலும் எவ்வித தயக்கமும் இல்லாமல் தகவல் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான வல்லநாடு தம்பிராட்டி அம்மன் கோவில் வளாகம் மற்றும் கணபதி கோயில் தெரு சமுதாய நலக்கூடம் ஆகிய 2 இடங்களில் பொதுமக்களுடன் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களின் தங்கள் ஊர் சம்மந்தப்பட்ட குறைகளை தெரிவித்தனர்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் ஊரக உட்கோட்டத்திற்குட்பட்ட ஊர்களில் இதுபோன்ற கலந்துரையாடல் கூட்டம் நடத்தி ஊரில் உள்ள குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். தற்போது இங்கு இந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் உங்களது குறைகளை தெரிவித்துள்ளீர்கள், சம்மந்தப்பட்ட துறைகளுக்கு உங்களது குறைகளை தெரிவித்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கென இலவச தொலைபேசி எண்கள் 1091, 1098 ஆகிய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையின் அவசர உதவிக்கு 100 என்ற எண்ணிற்கு அனைவரும் தொடர்பு கொள்ளலாம். மேற்படி எண்கள் 24 மணி நேரமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே மேற்படி எண்களை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எந்த பிரச்சனை நேர்ந்தாலும் எவ்வித தயக்கமும் இல்லாமல் தகவல் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அப்பகுதி பள்ளி மாணவ, மாணவியர் குழந்தைகளுக்கு புத்தகம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் மேற்பார்வையில் முறப்பநாடு காவல்நிலைய காவல் ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் செய்திருந்தனர். மேலும் வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் முருகன், வல்லநாடு கூட்டுறவு வங்கி தலைவர் பரமேஸ்வரன், வல்லநாடு சாது சிதம்பர சுவாமிகள் கோயில் தன்னார்வலர் குழு உறுப்பினர் தங்கராஜ் ஊர் பெரியவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


