ஸ்ரீவைகுண்டத்தில் 1.24 கோடி மதிப்பில் புதிய வாரச்சந்தை அமைக்கும் பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் குருஸ்கோவில் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வாரச்சந்தை இயங்கி வந்தது. இந்த வாரச்சந்தையில் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வெளியூர்களில் இருந்து தங்களது பொருட்களை வியாபாரம் செய்து வந்தனர். மேலும் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பொருட்கள் வாங்கி பயன்பெற்று வந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் வாரச்சந்தை செயல்படாமல் போனது.
தொடர்ந்து இந்த வாரச்சந்தையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் 1.24 கோடி மதிப்பில் புதிதாக வாரச்சந்தையை அமைக்கும் பணியை மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி செயலர் காதர், உதவி செயற்பொறியாளர் வாசுதேவன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வக்குமார், தி.மு.க. மாணவரணி மாநில துணை செயலாளர் உமரிசங்கர், முக்கிய பிரமுகர்கள் ராமஜெயம், பெருமாள், கொம்பையா, அருணாசலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


