
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் தூத்துக்குடி மாவட்ட கல்வித்துறை மற்றும் சிவகளை தொல்லியல் கழகம் இணைந்து உலக பாரம்பரிய வாரவிழாவை முன்னிட்டு தொல்லியல் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பிருந்து ஒரு பேருந்து மற்றும் மூன்று வேன்களில் 200க்கு மேற்பட்ட பள்ளி ஆசிரிய ஆசிரியர்களின் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர். தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி பேரணியைத் துவக்கி வைத்தார். அனைவருக்கும் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அழகு ராஜன், தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜேக்கப் மனோகர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ குமர குருபரசுவாமிள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்து சிவன் உள்படப் பலர் பேசினர். அதன் பின் பயணம் துவங்கியது. ஆசிரியர்கள் பாஞ்சலங்குறிச்சி கோட்டை , கழுகுமலை வெட்டுவான் கோயில் , சமண சிற்பங்களை ஆகிய இடங்களைப் பார்வையிட்டனர். அங்கு வைத்து தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் அலுவலர் ஆசைத்தம்பி, தொல்லியல் பணி நிறைவு வேதாச்சலம், தீன் பவுண்டேசன் ஆலோசகர் பாரதி ஆகியோர் கலந்துகொண்டு ஆசிரியர் மத்தியில் விளக்கம் அளித்தனர். முனைவர் வெ. வேதாசலம் எழுதிய கழுகுமலைச் சமணப்பள்ளி என்ற நூல் வெளியிடப்பட்டது. மேலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தானம் அறக்கட்டளை சார்பில் கழுகுமலை வரலாறும், பண்பாடும் என்ற சிறு நூல் வழங்கப்பட்டது. கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் பௌர்ணமி அறக்கட்டளை முருகன் உள்படப் பலர் கலந்துகொண்டனர்.
அதன் பின் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடந்து வரும் இடத்தினை ஆசிரியர்கள் பார்வையிட்டனர். அங்கு தொல்லியல் அலுவலர் எத்தீஸ் குமார் அனைவருக்கும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்து விவரங்களை எடுத்துக் கூறினார்.
ஆசிரியர்கள் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களையும், முதுமக்கள் தாழிகளையும் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொல்லியல் அலுவலர் ஆசைத்தம்பி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, பாளை ஜான்ஸ் கல்லூரி வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் ஜோசப் ராஜ், முனைவர் கந்தசுப்பு , தொல்லியல் அலுவலர் ராகவேந்திரர், பரந்தாமன், குமரேசன், ஸ்ரீ வைகுண்டம் குமர குருபரர் வரலாற்று ஆசிரியர் மாணிக்கம், காரபேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர் நி.பார்ஜின், மேல் மாந்தை அரசு மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர் பொன்செல்வி உள்படப் பலர் கலந்து கொண்டனர்.
குலசேகரபட்டினம் திரு அருள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர் பழனிசாமி நன்றி கூறினார்.
ஆதிச்சநல்லூரில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கும் பணி தொடங்கும் இவ்வேளையில் சுமார் 200க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இவ்விடத்திற்கு வருகை தந்தது , ஆதிச்சநல்லூர் பெருமைக்குப் புகழ் சேர்ப்பதாக அமைகிறது.