சாத்தான்குளம் மீன் கடையில் எடை குறைவுடன் மீன் விற்கப்பட்டதால் 6 எலக்ரானிக் தராசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தச்சமொழி தெருவில் மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. தற்போது மீன்கள் தராசுகள் மூலம் எடை அளவுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் வியாபாரிகள் எலக்ரானிக் தராசுகளை பயன்படுத்தி மீன்களை விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்கள் வாங்கி செல்லும் மீன்கள் எடையில் குளறுபடி இருந்து வருவதாக புகார் எழுந்து வந்தது. இதனால் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பிரச்னை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் புகாரின் பேரில் தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் விஸ்வநாதன், சாத்தான்குளம் துணை ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட தொழிலாளர் துறை அதிகாரிகள் மீன் கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது எலக்ரானிக் தராசுவில் குளறுபடி இருப்பதும், எடை அளவு கருவிகள் அரசு முத்திரை பதிக்காமல் சான்றிதழ் பெறாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 6 எலக்ரானிக் தராசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அனுமதி பெறாமல் குளறுபடியான முறையில் மீன்களை எடை போட்டு விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


