கருங்குளம் பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால் தண்ணீர் பெருகியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கருங்குளம் பகுதியில் தாமிரபரணி பாசன விவசாயம் உள்ளது. இங்கு மருதூர் மேலக்கால், கீழக்கால் வழியாக சுமார் 20ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பலனடைந்து வருகிறது. இங்கு ஜுன் மாதம் கார் சாகுபடியும், செப்டம்பர் மாதம் பிசான சாகுபடியும் கோடைக் காலத்தில் முன்கார் சாகுபடி ஆகிய மூன்று சாகுபடி விளையும். ஆனால் கடந்த 25 வருட காலமாக ஒரு சாகுபடியே விளைவது கடினமாக இருந்தது. இந்த ஆண்டு கார் சாகுபடிக்கான தண்ணீர் ஜுலை மாதம் வந்தது. எனவே தாமதமாக ஆரம்பித்த கார் சாகுபடியில் அறுவடை கடந்த 10 தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. ஒரு சில இடங்களில் விளைந்த இடத்தில் விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் பிசான சாகுபடி துவங்க தேவையான தண்ணீர் பாவநாசம் மேலணையில் இருந்தது. ஆனாலும் விவசாயப் பணி துவங்க போதுமான தண்ணீர் குளத்தில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் கனத்த மழை பெய்தது. இதனால் தண்ணீர் நிறைந்தது. மருதூர் மேலக்கால் ஆழிகுடி உள்படப் பல பகுதியில் தண்ணீர் வயல்களில் பெருகியது. இந்த வருடம் கார்சாகுபடி நடந்தது போலவே பிசான சாகுபடியும் நடைபெறும் நிலை உள்ளது. இதனால் சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு இந்த பகுதியில் இருபோகம் விளையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆழிகுடியில் இருந்து முத்தாலங்குறிச்சி வழியாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வடிவதற்கு முத்தாலங்குறிச்சி வடிகால் என்னும் ஆலங்கால் உள்ளது. இந்த கால்வாய் தூர் வாரி 25 வருடங்களுக்கு மேலாகிறது. இவ்விடத்தில் தூர் வாரினால் இதுபோன்று தண்ணீர் தேங்க வாய்ப்பில்லை. எனவே ஆலங்காலை தூர் வாரித் தரவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


