தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகேயுள்ள தட்சிணாபுரத்தைச் சேர்ந்தவர் முத்துமாலை மகன் முருகேசன் (57). இவர் சூரங்குடி மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக வேலைபார்த்து வந்தார். நேற்று அலுவலகத்தில் ஆயுதபூஜை கொண்டாடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வைப்பாறு கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அவ்வழியே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரது பைக்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து குளத்தூர் காவல்துறை ஆய்வாளர் ராபின்சன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


