தமிழக தொல்லியல் துறை சார்பில் கொற்கையில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது.
தொடர்ந்து 6 மாத காலமாக நடந்து வரும் இந்த அகழாய்வு பணியில் 500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 9 அடுக்குகள் கொண்ட திரவப்பொருட்கள் வடிகட்டும் குழாய், சங்க இலக்கியத்தில் கூறப்படும் செங்கல் கட்டுமான அமைப்பு, இரண்டடுக்கு கொள்கலன், சங்கறுக்கும் தொழில்கூடம் இருந்ததற்கான அடையாளங்கள், வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு இருந்ததை உறுதிப்படுத்தும் சான்றுகள் என ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கொற்கை அகழாய்வு பணியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு சங்க இலக்கிய காலத்தில் சங்குகள் அறுப்பதற்கும், தீட்டுவதற்கும் சங்குகளை வடிவமைப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட தேய்ப்பு கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல் சங்கு பொருட்கள் வடிவமைப்பதற்கு மட்டுமல்லாமல் மூலிகைகள் அரைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுப்பணிகள் ஒரு வார காலத்தில் நிறைவு பெற உள்ள நிலையில் தொடர்ந்து அகழாய்வு பணியில் பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.


