மத்திய அரசின் மருத்துவத் துறை மூலம் மக்களை தேடி இந்திய மருத்துவம் என்ற பிரிவில் நாடு முழுவதும் மக்களுக்கு மூலிகை தாவரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவப் பிரிவு சார்பில் நேற்றைய தினம் பொதுமக்களுக்கு மூலிகை தாவரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் அஸ்வினி ஜெனிபர், சித்த மருத்துவர் செல்வகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சித்த மருத்துவர் செல்வகுமார் பேசுகையில், நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை பாதுகாத்து வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் மூலிகைகளின் மருத்துவ குணங்களையும் எடுத்துரைத்தார். தொடர்ந்து அனைவருக்கும் மூலிகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மருந்தாளுனர் வெங்கடேசன், பணியாளர்கள் வேம்பன், மேரி ஆகியோர் செய்திருந்தனர்.


