தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லகுளம் பஞ்சாயத்துக்குட்பட்ட அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பெருமாள் மனைவி வேம்பு அம்மாள் (60).
பெருமாள் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களது மகன் கேரளாவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு வேம்பு அம்மாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது இரவு 11 மணி அளவில் திடீரென்று அவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது இதில் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டவுடன் அங்கு வந்தனர். அதற்குள் வேம்பு அம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சேரகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பேத்கர் நகரில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அரசு சார்பில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அந்த வீடுகளில் இதுவும் சீரமைத்து கொடுக்கவில்லை. இதன் காரணமாகவே இந்த வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலியானதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதே போல் சேதமடைந்த வீடுகளை விரைவில் சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


