தூத்துக்குடி அருகே பைக் மீது வேன் மோதியதில் தீவிபத்து ஏற்பட்டு 2பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம் பகுதியில் உள்ள தூத்துக்குடி – திருநெல்வேலி சாலையில் நேற்று இரவில் தூத்துக்குடி நோக்கி மோட்டாா் சைக்கிளில் இருவா் சென்றுகொண்டிருந்தனா். அப்போது அதே சாலையில் ஒருவழி பாதையில் தனியார் நிறுவன வேன் வந்து கொண்டிருந்தது. வேனை தாழையூத்து பகுதியைச் சோ்ந்த பால்துரை என்பவா் ஓட்டினாா். அவா் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வேன் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், வேன் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மோட்டாா் பைக்கில் வந்த இருவரும் வேனுக்கு அடியில் சிக்கியதால் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனா். தகவலறிந்த முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பைக்கில் வந்தவர்கள் நெல்லை மாவட்டம், நாங்குநேரி மூலைக்கரைப்பட்டி ஆதிபிரகாஷ் தெருவைச் சேர்ந்த கணேசன் (46) என்பவரும் அவரது பேத்தியும் உயிரிழந்துள்ளது தெரியவந்தது. இருவரும் தீயில் கருகி இறந்ததால், அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும் தலைமறைவாக உள்ள வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.


