ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25ம் தேதி அகழாய்வு பணியானது துவங்கியது. இந்த பணி கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் நிறைவடைந்தது. அகழாய்வு பணியில் 27 முதுமக்கள் தாழிகள், பானைகள், தமிழ் பிராமி எழுத்துகள் என சுமார் 500 க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் அருகே உள்ள தகவல் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அகழாய்வில் குழியில் கண்டுபிடிக்கப்பட்ட 27 முதுமக்கள் தாழிகளையும் பாதுகாப்பாக வெளியே எடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. அகழாய்வு இயக்குனர் பாஸ்கர், தொல்லியல் அலுவலர் லோகநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் இதற்கான பணியில் ஈடுபட்டனர். இதில் முழுமையாக எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் தனியாகவும், உடைந்த நிலையில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் தனியாகவும் பத்திரப்படுத்தப்பட்டது. அனைத்து முதுமக்கள் தாழிகளும் அருகே உள்ள தகவல் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இதில் முழுமையாக எடுக்கப்பட்ட 7 முதுமக்கள் தாழிகள் தவிர மற்ற அனைத்து உடைந்த முதுமக்கள் தாழிகள் அனைத்தும் ஒட்ட வைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். மேலும் எடுக்கப்பட்ட பொருள்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும். என்று தொல்லியல் இயக்குனர் பாஸ்கர் தெரிவித்துள்ளனர்.
தற்போது தொல்லியல் சம்பந்தப்பட்ட பணிகள் விரைவாக நடந்து வருகிறது. மதுரை உயர் நீதிமன்றத்தில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தொடர்ந்த வழக்கில் விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர்கடந்த 6 ந்தேதி மதுரை உயர்நீதி மன்றத்தில் விசாரித்தனர். 2004 நடந்த ஆதிச்சநல்லூர் அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் என அறிவுருத்தியுள்ளனர் . வருகிற 16 ந்தேதி இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் வரஉள்ளது. இதற்கிடையில் மத்திய தொல்லியல் துறையினர் தொல்லியல் படிப்புக்கு தமிழை புறக்கணித்த வகைக்கு பயங்கரமான எதிர்ப்பு தமிழர்கள் மத்தியில் கிளம்பியது. நீதியரசர்களும் இதை வன்மையாக கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் தற்போது வேகமான பணி நடைபெறுவது தொல்லியல் ஆர்வலருக்கு மகிழ்ச்சியை வரவழைத்துள்ளது.
==


