ஆதிச்சநல்லூர் ஆய்வு முடியும் போது தமிழரின் தொன்மை வெளிப்படும் என தூத்துககுடி மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி பெருமிதமாக பேசினார்.
உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25ம் தேதி முதல் மாநில அரசு சார்பில் அகழாய்வு பணி துவங்கி நடந்து வருகிறது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர் லோகநாதன் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்ட அகழாய்வு பணிககாக 15 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டது 40 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த அகழாய்வின் போது, சிறுசிறு ஓடுகள், மற்றும் வட்ட வடிவில் உலை போன்ற அமைப்பு வெளியே தெரிந்தது. அதை ஆய்வாளர்கள் நுண்ணியமாக அகழ்ந்து ஆய்வு செய்துவருகிறார்கள். மேலும் ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மனிதர்கள் வாழ்விடத்தினை தேடி ஆதிச்சநல்லூர் குளத்து கரை மற்றும் வீரளபேரி ஆகிய இடங்களிலும் அகழாய்வு பணி நடந்து வருகிறது.
தொடர்ந்து 24 வது நாளான இன்று வரை அகழாய்வு பணி சிறப்பாக நடந்து வருகிறது. இந்த இடத்தினை ஆய்வு செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சிதலைவர் சந்தீப் நந்தூரி வந்தார். அவரை அகழாய்வு இயக்குனர் பாஸ்கரன், தொல்லியல் அலுவலர் லோக நாதன் ஆகியோர் அழைத்து சென்று, பாண்டியராஜா கோயில் அருகே தோண்டப்பட்ட அகழாய்வு குழியினை காட்டினர். அவர் அந்த குழிகளில் கிடைத்த பல்வேறுபொருள்கள் மற்றும் உள்ளே புதைந்திருக்கும் முதுமக்கள் தாழிகள் மற்றும் அங்கு கிடைத்த பொருள்களை ஆய்வு செய்தார்.
இந்த அகழாய்வின் போது கிடைத்த மோதிரம், அகல் விளக்கு, புகைப்பிடிக்கும் குழாய், வளையல் , உள்பட பல பொருள்களை பார்வையிட்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 1 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. 2800 வருடங்களுக்கு முன்பு இந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறைகள், இறந்தவர்களை எப்படி அடக்கம் செய்துள்ளார்கள் என்பதை கண்டறியும் பணிகள் இந்த பகுதியில் நடந்து வருகிறது. தற்போது ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் குழிகள் தோண்டப்பட்டு அதிலிருந்து முதுமக்கள் தாழிகள் மற்றும் பொருட்களை மிகவும் பாதுகாப்பாக எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது வரை ஆதிச்சநல்லூரில் மோதிரம், பழங்காலத்தில் புகைப்படிக்க பயன்படுத்திய குழாய் போன்றவை இந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதே போல் சிவகளையில் பல வித பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு புதைக்கப்பட்ட மக்களின் வாழ்வியல்களை கண்டுபிடிக்கும் பணி இங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திற்கே பெருமையான விஷயமாகவும், தமிழ்நாட்டில் மிகவும் பழமையான அதாவது 2800 ஆண்டுகள் பழமையான இடம் இது தான். எனவே இங்கு கிடைக்கும் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது அந்த காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் தென்மை நமக்கு தெள்ளத் தெளிவாக தெரிய வரும் என்று கூறினார்.
அவருடன் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் சுப்பு லெட்சுமி, செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கூடுதல் வட்டாச்சியர் ரமேஷ், சங்கரநாரயணன், வருவாய் ஆய்வாளர் அய்யனார், கருங்குளம் கிராம நிர்வாக அதிகாரி மணிமாலா, பஞ்சாயத்து தலைவர்கள் கருங்குளம் உதயசங்கர், ஆறாம்பண்ணை சேக் அப்துல் காதர், ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ், பஞ்சாயத்து எழுத்தர் சோமு, சங்கரபாண்டியன், ராமையா, முத்துராமலிங்கம், சித்தார்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பனை ஒலையில் முதுமக்கள் தாழியை மாவட்ட ஆட்சி தலைவருக்கு பரிசளித்த தொழிலாளி
ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் இங்கு வரும் பார்வையாளர்களை கவர்ந்திழுத்து உள்ளது. எனவே கருங்குளத்தினை சேர்ந்த பால்பாண்டி என்ற பனை தொழிலாளி ஒரு வித்தியாசமான முயற்சி செய்தார். அவர் முதுமக்கள் தாழியை பனை ஓலையில் செய்து , அதற்கு வர்ணம் தீட்டி , மாவட்ட ஆட்சி தலைவரிடம் பரிசாக கொடுத்தார். அதன் மாவட்ட ஆட்சி தலைவர் ரசித்து பெற்றுக்கொண்டார். பின் அந்த தொழிலாளியை பாராட்டினார். இவர் ஏற்கனவே காமராஜர், அப்துல்கலாம், ஏர் உழவன் போன்ற உருவங்களை பனை ஓலையில் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாமிரபரணி கரையில் ஏற்கனவே சுத்தப்படுத்திய து போலவே மீண்டும் சுத்தப்படுத்த வேண்டும் என எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மாவட்ட ஆட்சி தலைவரிடம் கோரிக்கை வைத்தார். ஏற்கனவே தாமிரபரணியில் சுத்தம் படுத்தும் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்ட சமூக ஆர்வலர் பலர் தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகளாக ஜெயித்து உள்ளனர். எனவே மீண்டும் தாமிரபரணியை சுத்தப்படுத்தினால், அவர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கூடுதல் உதவியாக இருப்பார்கள். எனவே தாமிரபரணி கரையை மீண்டும் சுத்தப்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சி தலைவர் தாமிரபரணி கரையில் மீண்டும் சுத்தப்படுத்தும் பணி தூத்துக்குடி மாவட்டத்தில் விரைவில் தொடங்கும் என்றும் , அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி கூறினார்.
&&&


