உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25ம் தேதி மாநில அரசு சார்பில் முதற்கட்டமாக அகழாய்வு பணி துவங்கியது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் மற்றும் லோகநாதன் தலைமையில் இந்த அகழாய்வு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆதிச்சநல்லூரில் 5 குழிகள் அமைத்து அகழாய்வு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கொரோனா காரணமாக அலுவலர்கள் குறைவான எண்ணிக்கையில் இந்த பணிகள் நடந்து வந்தது. இன்றைய தினம் புதிதாக 2 தொல்லியல் மாணவர்கள் வருகை தந்துள்ளனர். மேலும் திங்கள்கிழமை கூடுதலாக வர உள்ளனர்.
ஆதிச்சநல்லூரில் கடந்த 8ம் தேதி 3000 ஆண்டுகள் பழமையான 2 முதுமக்கள் தாழிகள் மற்றும் 2 கை மூட்டு எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆதிச்சநல்லூர் பரம்பில் புதிதாக அமைக்கப்பட்ட குழியில் இன்று 3000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தாழி தற்போது 2 மீட்டர் உயரம் வரை உள்ளது. மேலும் உள்ளே 3 மீட்டர் உயரம் வரை இருக்க கூடும் என்று தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அதே குழி அருகே அமைக்கப்பட்ட மற்றொரு குழியில் செஸ் விளையாடும் மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும், அகழ் விளக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதுமக்கள் தாழிக்குள் அந்த காலத்தில் மனிதனை உட்கார்ந்த நிலையில் மனிததைன வைத்து புதைக்கும் பழக்கம் இருந்த காரணத்தினால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழியில் மனித எலும்புகூடு இருக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் அதே பகுதியில் அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆதிச்சநல்லூரில் மாநில அரசு சார்பில் முதல் முறையாக நடைபெறும் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


