ஆதிச்சநல்லூரில் 4ம் நாளாக அகழாய்வு பணிகள் தீவிரம். குடியேற்றங்களைக் கண்டுபிடிக்க தொல்லியல் துறையினர் நடவடிக்கை.
உலக நாகரீகத்தின் தொட்டில் என ஆதிச்சநல்லூர் அழைக்கப்படுகிறது. இந்த ஆதிச்சநல்லூரில் கடந்த 25ம் தேதி அகழாய்வு பணியானது துவங்கியது. ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குநர் டாக்டர் பாஸ்கர் தலைமையில் 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 20க்கும் மேற்பட்ட ஊர்மக்கள் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆதிச்சநல்லூரைப் பொறுத்த வரை 4ம் நாளாக இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆதிச்சநல்லூரில் 1876 ல் ஜகோர், 1902 அலெக்ஸாண்டர் இரியா, 2004 ல் தியாக சத்திய மூர்த்தி ஆகியோர் தலைமையில் அகழாய்வு நடந்தது. தற்போது மாநில தொல்லியல் துறை சார்பில் தொல்லியல் இயக்குநர் டாக்டர் பாஸ்கர் தலைமையில் நடைபெறுகிறது. அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் இராமநாதபுரம் அழகன் குளம், திருவள்ளுவர் மாவட்டம் பட்டரைபெரும்புதூரில் நடந்த அகழாய்வு ஆகியவற்றில் அகழாய்வு இயக்குநராக பணியாற்றியவர்.
கீழடி ஆய்வு மற்றும் முடிவு சமபந்தபட்ட பணிகளில் முக்கிய அங்கம் வகித்தவர். சிவகளை தொல்லியல் களம் முக்கியமானது என்பதை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை செய்தவரும் இவர்தான். எனவே அவரின் அனுபவம் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என தொல்லியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆதிச்சநல்லூரில் நடந்து முடிந்த 5 கட்ட அகழாய்வுகளில் அனைத்திலுமே முதுமக்கள் தாழிகளும், இரும்பு பொருட்களும் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்னோர்கள் வாழ்ந்த குடியேற்றங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது அகழாய்வு இயக்குநர் பாஸ்கர், குடியிருப்பு இடங்களைத் தேர்வு செய்து பயணித்து வருகிறார். இதனால் 144 வருடங்களாகக் குழந்தைப் பருவத்திலிருந்து வரும் ஆதிச்சநல்லூர் அறிக்கை பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
எனவே இந்த அகழ்வாய்வானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தற்போது 50க்கு 50 என்ற அளவில் 2 குழிகள் அமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிவகளையிலும் தொல்லியல் இயக்குநர் டாக்டர் பிரபாகரன் தலைமையில் ஆய்வு நடந்து வருகிறது. இவரும் அகழாய்வு இயக்குநர் டாக்டர் பாஸ்கர் தலைமையில் நடந்த அகழாய்வு பணிகளில் பங்கு பெற்றவர். சிவகளையில் முதல் கட்ட ஆய்வு நடைபெறுவதால், அங்கு எதுமாதிரியான பொருள்கள் கிடைக்கப்போகிறது. அதன் முக்கியத்துவம் என்ன என்பது அறிய மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.


