கருங்குளம் பகுதியில் ஊராட்சியில் பணிபுரியும் துப்புறவு பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை திட்ட இயக்குநர் வழங்கினார்.
உலக முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக மே 3ம் தேதி வரை ஊடங்கு உத்தரவை இன்று பிரதமர் நரேந்திர மோடி விதித்துள்ளார். தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற துப்புறவு தொழிலாளர்கள் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஊராட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட திட்ட இயக்குநர் தனபதி ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள செய்துங்கநல்லூர், தாதன்குளம், தெற்கு காரசேரி, சேரகுளம், கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு சென்று அங்கு பணிபுரியும் துப்புறவு தொழிலாளர்கள் சுமார் 75க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். மேலும் துப்புறவு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து ஆலோசனை வழங்கினார். செய்துங்கநல்லூர் பஞ்சாயத்தில் அவர் கலந்துகொண்டபோது அவருடன் கருங்குளம் ஒன்றிய தலைவர் கோமதி ராஜேந்திரன், கருங்குளம் ஆணையாளர் சுப்புலெட்சுமி, கூடுதல் ஆணையாளர் வெங்கிடாசலம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துலெட்சுமி, செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், அரசு மருத்துவர் அஷிசா, சுகாதார ஆய்வாளர் சண்முகப்பெருமாள், வார்டு உறுப்பினர் பட்டுராஜ், தன்னார்வ தொண்டர் சுடலை, பஞ்சாயத்து எழுத்தர் சங்கர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


