ஏரல் அருகே கடனை திருப்பி தராததால் வாலிபரை அடித்துக் கொன்ற கந்து வட்டிக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே சிறுதொண்டநல்லூர் மறைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் சுலைமான் மகன் சாகுல்ஹமீது (43). இவர் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த கண்ணன் என்பவரிடம் ரூ.1லட்சம் கடன் வாங்கியிருந்தாராம். இந்நிலையில், சாகுல் ஹமீது கடனை திருப்பி கொடுக்காததால் கண்ணன் உட்பட 6பேர் சேர்ந்து சாகுல் ஹமீதை கடந்த 14ம் தேதி காரில் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரை ஆழ்வார்திருநகரியில் கண்ணன் நடத்திவரும் மளிகைக் கடையின் பின்புறம் உள்ள இடத்தில் கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தியுள்ளனர்.
2 நாட்களுக்கு பின்னர் சாகுல் ஹமீதை வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளனர். இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய சாகுல் ஹமீதை உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சாகுல் ஹமீது உயிரிழந்தார். இது குறித்து ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி கொலை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பாக ஏரலைச் சேர்ந்த முத்துகுமார் மகன் சோமசுந்தரம் (47) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கண்ணன், மற்றும் அவரது கூட்டாளிகளான முத்துபாண்டி, ஜான், ஆறுமுகநயினார் உட்பட 5பேரை போலீசார் தேடி வருகின்றனர். கந்து வட்டிக் கும்பல் கடத்தி தாக்கியதால் வாலிபர் உயிரிழந்த சம்பவ அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


