தாமிரபரணியில் மனித கழிவுகளும், சாக்கடைகளும் இறந்த விலங்குகளின் உடல்களும் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நகர செயலாளர் முத்துமாலை மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், “தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் ஆழ்வார் திருநகரியில் பாய்ந்து ஓடும் தாமிரபரணி ஆற்றில் ஆழ்வார்திருநகரியில் இருந்து தூத்துக்குடி செல்லும் பாலத்தின் கீழ்புறம் புதிதாக தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது.
மேற்படி தடுப்பணை கட்டப்பட்டது முதல் அந்தப் பகுதியை முறையாக சுத்தம் செய்யாமல் விட்டதன் காரணமாக மனித கழிவோடும் சாக்கடைகளும் இறந்த விலங்குகளின் உடல்களும் விலங்குகளின் கழிவுகளும் சேர்ந்து தடுப்பணையில் தேங்கியிருக்கும் தண்ணீர் அது முதல் மேற்கே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அசுத்தம் கலந்த சாக்கடை நீர் கலந்த ஆற்றுநீர் தேங்கியுள்ளது
இந்த இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் தூரத்தில் தான் சுற்றி இருக்கக்கூடிய கிராம பகுதிகளுக்கு குடிநீர் வழங்கக்கூடிய உரை கிணறுகள் 10க்கும் மேற்பட்டவை அமைக்கப்பட்டுள்ளன. மேற்படி உரை கிணறுகளில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீர் ஆனது இந்த சாக்கடை நீர் கலந்து கலந்து தான் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது
இதனால் இப்பகுதியில் இருக்க மக்களுக்கு பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உடல் உபாதைகளுக்கு உட்பட்டு வருகிறார்கள். இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தி இப்பகுதியில் சுகாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம். தவறும் பட்சத்தில் மக்களை திரட்டி மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கவும் தயாராக இருக்கிறோம்.ஒ இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


