என்னை பொறுத்தவரை மேலப்பாளையம் தகவல் வேண்டும் என்றால் எல்.கே. எஸ் மீரான் முகைதீன் அவர்களிடமடட் தான் கேட்பேன். அதோடு மட்டுமல்லாமல் அவரது முக நூலை நான் தொடர்ந்து கவனித்துக்கொண்டே வருவேன். அவர் பதிவு எல்லாம் வித்தியாசமாக இருக்கும்.அவரது முகநூல் வரலாறு மேலப்பாளையம் வரலாற்றை பேசும். அண்மையில் அவர் ஒரு பதிவில் மேலப்பாளையத்தில் தெருக்கள் தோறும் கைத்தறி நெசவு, நூல் பாவு போடுகிற காலத்தைப் பற்றி எ-ழுதியிருந்தார்.
அதனைப் படித்துவிட்டு பல்வேறு நண்பர்கள் பாவு என்றால் எவ்வாறு இருக்கும் ? என்று அவரிடத்தில் கேள்விகளைக் கேட்டிருந்தார்கள்.
அதைப்பற்றி அவர் எழுதியிருந்தார்.
1980 கள் வரை திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் , கல்லிடைக்குறிச்சி, தென்காசி , கடையநல்லூர் இன்னும் பல்வேறு பகுதிகளில் நெசவுத்தொழில் சிறப்பாகவே இருந்தது.
கடையநல்லூரில் பெண் மக்களும் தறியில் இறங்கி பருத்தி நூல் ஆடை நெய்வதைப் பார்த்து அவர் பிரமித்து போயிருக்கிறார்.
அதற்குப் பின்னர் கைக்குட்டைகள் நெய்வதையும் அவர் பார்த்துள்ளார்.
பல நூறு ஆண்டுகள் நெசவுத்தொழில் மூலம் பல்வேறு ஊர்கள் வருவாயைப் பெற்றன.
மேலாப்பாளையம் ஊரில் பாவு ஆற்றுதல். பாவு வாளிக்கிறது. என்று சொல்வார்கள்.
340 அடி 360 அடி என்று நீளத்தில் தெரு முழுதும் நூல் பாவு விரிக்கப்பட்டிருக்கும்.
அதனைக் குதிரை என்கிற கம்புகளால் தாங்கப்பட்டு இருக்கும் ஒரு ஸ்டாண்ட் போன்ற அமைப்பில் நிறுத்துவார்கள்.
அதற்குப் பின்னர் அரிசி கஞ்சியை தண்ணீர் போல் ஆக்கி ஒரு நீண்ட 4 அடி நீள ஒரு சாண் அகல பைக்குள் ஊற்றி, அந்த நூல் பையை வலது , இடது பக்கம் அசைப் பார்கள். அதிலிருந்து தண்ணீர் வடிவில் ஆன கஞ்சி நூல் மேல் பட்டு தரையில் அப்படியே படியும்.
நீண்ட நூல் பாவை எட்டு அல்லது ஏழு பாகங்களாக பிரித்து ஒவ்வொரு பாகத்திலும் இருவர் வேலை செய்வார்கள்.
சொந்தக்காரங்கள் சொக்காரர்கள் தெருவில் இருந்தால் அவர்களே கூறு பிரித்துக் கொள்வார்கள்.
பாவு போட்டு இருக்கும் வீட்டில் உள்ள பெண் மக்கள் குடத்தில் கஞ்சியை நிரப்பிக் கொண்டு வந்து பாவின் மீது உள்ள கஞ்சி பையில் ஊற்றுவார்கள்.
தப்பித்தவறி பெண்மக்கள் அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு கஞ்சி ஊற்ற வந்தது தெரிய வந்தால் மச்சான், மைத்துனர் கிண்டல் கேலிகள். கேள்விகள் மிக அதிகமாக இருக்கும். அசட்டு சிரிப்பு அங்கே ஆட்கொள்ளும்.
காது கொடுத்து கேட்கின்ற அந்தப் பெண்மணி ஓடியே போய் விடுவார்.
வாய்க்கால் ஆறுகளிலே குளித்து முடித்து விட்டு வருகின்ற இளைய வயது பெண் மக்கள் குளித்து முடித்து விட்டு வந்த ஈர கீழ் வேஷ்டியை மறைத்துக் கொண்டு வந்து தான் தங்களுடைய வீடுகளின் பின்பக் கத்தில் காயப் போடுவார்கள். இந்த அளவுக்கு அவர்களிடத்தில் வெட்க உணர்வு மேலிட்டு இருந்தது.
ஈரமாக பாவுகளின் மேலிருக்கும் கஞ்சியை நீண்ட அலாம்பு கம்புகள் வைத்து அடித்து தட்டுவார்கள்.
அப்போது பனித்தூரலாய் கஞ்சி மேலும் கீழும் எழுந்து வானவில்லின் வர்ணஜாலம் காட்டும். அதற்கு மேலும் ஈரம் உள்ள கஞ்சியை நான்கடி நீள நார் பிரஷ். வைத்து துடைத்து எடுப்பார்கள். மேலப்பாளையத்தில் அதை புல்லு என்பார்கள்.
1985களுக்கு முன்னர் வரை எங்கள் ஊரில் தெருப் பகுதிகளில் தார்ச்சாலைகள் எவையும் போடப்பட்டதில்லை. தொடர்ந்து நூல் பாவிலிருந்து வெளிவந்த பச்சைக் கஞ்சி தரையை அவ்வளவு அழகாக ஆக்கி வைத்திருக்கும்.
எல்.கே.எஸ் குடும்பத்தில் மாஸ்டர் வீவர்கள் தரகனார்கள் அதிகமாக இருந்ததனால் ஒரு சதுர அங்குலத்தில் நூல் எத்தனை உள்ளது என்பனவற்றையெல்லாம் அதற்குரிய லென்ஸ் வைத்து பார்ப்பதற்கு கற்றுத் தந்துள்ளார்கள்.
1980 ஆம் ஆண்டு சமீபம் ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேச வந்த ஒரு தலைவர் பெரியோர்களே தாய்மார்களே தொழிலாளர் தோழர்களே என்று சொல்லிவிட்டு அப்படியே மேடையில் உள்ளோர் பெயர்களையும் குறிப்பிட்டு விட்டு தன்னுடைய பிரச்சாரத்துக்கு வந்து விட்டார். இதைக் கேட்ட திமுக தொழிற்சங்கத்தைச் சார்ந்த எல்.கே.எஸ் அவர்களின் நெருங்கிய உறவினர் டி எம் சிந்தா புகாரி அவர்கள் கலைஞருக்கு கடிதம் எழுதினார். எல்லோரையும் குறிப்பிட்டு விட்ட அந்த? பேச்சாளர் நெசவாளிகள் என்று சொல்ல மறந்து போய்விட்டார். என்று கடும் கோபத்தில் கடிதம் ஒன்று எழுதினார். அந்தக் கடிதத்தை பார்த்து விட்டு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் நெசவாளிகள் பெயரை சொல்லாமல் விட்டது தவறு அதற்காக வருந்துகிறேன் என்று பதில் கடிதம் எழுதியிருந்தார்.அந்த அளவிற்கு பொதுக் கூட்டங்களில் தங்களுடைய தொழிலைக் குறிப்பிட்டு பேசுவார்களா? என்று காத்திருந்தது ஒரு காலம்.
1980 க்கு பின்னர் துபாய் வருமானம் வந்தது. கைத்தறி நெசவு நின்றது.
அவர் பதிவை பார்க்கும்போது எனக்கு பல நினைவுகள் வந்தது. நான் குவைத் போயிருக்-கும் போதுஅங்கு மிகவும் முக்கியமான அருங்காட்சியகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பின் போது அங்கு நெசவாளர்கள் நூல் நூற்பது போன் உருவச்சிலைகள் செய்துவைத்துஇருப்பதை பார்த்தேன். நான் 1988 ல் தனியார்பேருந்தில் மேலப்பாளையம் பகுதியில் பேருந்து நடத்துனராகபணிபுரிந்தபோது ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம் அருகில் அகலமாக இருக்கும் தெருவில் இதுபோன்று நெசவாளர்கள் தொழில் செய்வதை பார்த்து இருக்கிறேன். ஒருவேளை அந்தகாலத்தில் தொழில் தொய்வுற்ற காலமாக இருந்திருக்கும். அந்த நேரத்திலேயே எனக்கு அது பிரமாணடமாக தெரிந்தது. அப்படியென்றால் எல்.கே.எஸ் அய்யா கூறும் இந்த கால கட்டம் எப்படி இருந்து இருக்கும் என நினைத்து பார்க்கிறேன் எனக்கு சந்தோசமாக இருக்கிறது.
இந்த வேளையில் தான் நான் தென்பாண்டிச்சீமையிலே பாகம் 2 என்ற எனது நூலில் மேலப்பாளையம் பற்றி எழுதி சில கருத்துக்களை இங்கே பதிவிடலாம் என நினைத்தேன்.
இஸ்லாமிய வார்த்தைகள் பல தற்போது தமிழில் பிரிக்க முடியாமல் உள்ளன என்கிறார் மேலப்பாளையம் கவிஞர் தொ.மு.ச.காஜாமுகைதீன். அவர் கூறும்போது, தாசில்தார், சிரஸ்தார், தபேதார், டவாளி, ஆமினா, ஜப்தி, ஜமீன் போன்ற வார்த்தைகள் அரபியில் இருந்து தமிழுக்கு வந்தது என்றார். மேலும் உடை வகைகளில் ஜிப்பா, ஜமுக்காளம் போன்றவையும் இது போலத்தான் வந்துள்ளது. அடுத்து உணவு வகைகளில் பிரியாணி, குஸ்கா, சுக்கா, புரோட்டா, சேமியா போன்ற வார்த்தைகளும் அரபு மொழியில் இருந்து தான் வந்துள்ளது.
இராணி மங்கம்மாள் காலத்தில் செல்வர்கள் அடக்கமான நிறைய தர்க்காவிற்கு அவர் உதவி புரிந்துள்ளார். கடையநல்லூர் தர்காகவிற்கு குளம் வெட்டி கொடுத்து இருக்கிறார். வல்லநாடு அருகே உள்ள மியகான்பள்ளி தர்க்காவை அவர்தான் கட்டி கொடுத்து உள்ளார். மதுரையை ஆண்ட திருமலை மன்னரும் பல ஊர்களுக்கு தர்க்கா கட்டி தந்துள்ளார். மேலும் மானியமும் வழங்கியுள்ளார். நாகூரில் கடும் பஞ்சம் ஏற்பட்ட போது அங்குள்ள புறாக்களுக்கு சரபோஜி மன்னன் தானியங்கள் வழங்கியுள்ளார்.
மேலப்பாளையத்தில் பல தர்கா மற்றும் பள்ளிவாசல் எனும் வழிப்பாட்டு தலங்கள் உள்ளன.
( நதி வற்றாமல் ஓடும்)


