முறப்பநாடு பகுதியில் உள்ள தாமிரபரணியில் அமலைச்செடியை தொண்டு நிறுவனம் மூலம் அகற்றுவோம் என்று பொதுப்பணித்துறையினர் பதிலளித்துள்ளனர்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கடந்த ஜுன் மாதம் 13 ந்தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் அவர்களை நேரில் சந்தித்து மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் தெட்சண காசி என்று அழைக்கப்படும் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் அமலை செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. இங்கு அமாவாசை உள்பட முக்கிய நாள்களில் ஏராளமான பக்தர்கள் வந்து ஸ்நானம் செய்கிறார்கள். வெளியூரில் இருந்து அதிகமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள் . அமலை செடி அடர்ந்து இருப்பதாலும், அதில் விஷசந்துகள் குடியிருந்து வருவதாலும் பக்தர்களை அச்சுருத்துவதாக உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் குளிக்கும் இடத்தில் அமலைசெடி அடர்ந்து இருப்பதால் தூர் நாற்றம் வீசுகிறது. இந்த பகுதியில் இருந்து தூத்துக்குடிக்கு மூன்று பைப் லைன் மூலமாக தண்ணீர் செல்கிறது. விருதுநகர் காரியாப்பட்டி, கருங்குளம் ஒன்றியத்துக்கு உள்பட சுமார் 42 கிராமங்களுக்கும் இங்கிருந்து குடிதண்ணீர் செல்கிறது. எனவே அந்த தண்ணீரும் தூர் நாற்றம் வீசும் அபாயம் ஏற்படும். எனவே அமலைச்செடிகளை அகற்றித்தரவேண்டும். என்று கோரிக்கை விடுத்திருந்தார். மாவட்ட ஆட்சியர் இந்த மனுவை பொதுப்பணித்துறை உதவிச்செயற்பொறியயாளர் கு. ஆதிமூலத்துக்கு விளக்கம் கேட்டு அனுப்பியிருந்தார்.
அந்த மனுவிற்கு பதிலளித்த உதவிச்செயற்பொறியாளர் கு. ஆதிமூலம் முறப்பநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் உள்ள அமலைச்செடிகளை தொண்டு நிறுவனங்கள் மூலமாக அகற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியிருந்தார்.
பொதுப்பணித்துறையினர் அறிவித்தப்படி விரைவில் முறப்பநாடு ஆற்றில் உள்ள அமலைச்செடிகளை அகற்றி தரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


