சிற்பி பாமா 75 வயதான இளைஞர். பதிவில் காட்டப்பட்டுள்ள படம் இந்த இளைஞரால் உருவாக்கப்பட்ட ஒரு பெண்ணின் தேக்கு மரச் சிற்பம். படுத்தவாறு உள்ள பெண்ணை உருவாக்கி அதன் கையில் ஒரு பல்ப்பை இணைத்துள்ளார்.
இந்த சிற்பத்தை எவ்வாறு செய்திருப்பார் எனப் பார்ப்போம். சிற்பத்தின் அடிப்பகுதியில் ஒரு ஓட்டை இட்டுள்ளார். அந்த ஓட்டை மார்பைத்தாண்டி இடது கை தோள் பட்டை வரை மரத்தைக் குடைந்து கண்ணுக்குத் தெரியாமல் ஏற்படுத்தியுள்ளார்.
அடுத்து சிலையின் இடது உள்ளங்கை குடைந்துள்ளார். அப்படியே குடைந்து குடைந்து இடது உள்ளங்கை தோள்பட்டை வரை ஒரு ஓட்டை போட்டுள்ளார். இந்த ஓட்டை எல்லாம் சிலை உள்ளேதான் உள்ளது.வெளியில் எதுவும் தெரியாது. இப்படி குடைந்து உருவாக்கப்பட்ட ஓட்டை சிலையின் பின் பகுதியிலிருந்து இடது தோள் பட்டை வரை ஏற்கனவே போடப்பட்ட ஓட்டையுடன் சேர்க்கிறார்.
அடுத்து சிலையின் அடிப்பகுதியில் போடப்பட்ட துவாரம் வழியாக ஒரு மின்சார வயரை சொருகியிருக்கிறார். அந்த வயர் தோள்பட்டை வரை செல்கிறது. அங்கிருந்து திரும்பி இடது கை வழியாக உள்ளங்கையை அடைகின்றது. உள்ளங்கைக்கு வந்த வயருடன் ஒரு சிறிய பல்ப்பை இணைத்திருக்கிறார். சிலையின் அடிப்பகுதியில் உள்ள வயரை மின் இணைப்புடன் இணைத்திருக்கிறார். இது அவ்வளவு எளிதான வேலை கிடையாது.
சிற்பி பாமா ஒரு திறமையான தொழில்நுட்ப வல்லுநர். அவரைப் பொறுத்தவரை, மரத்திற்கும் பிளாஸ்டிக்கிற்கும் வித்தியாசம் இல்லை. அவரால் மரத்தை பிளாஸ்டிக் போல வளைத்து மடிக்க முடியும். அதனால்தான் இப்படி அருமையான சிலை செய்ய முடிகிறது.
ஒருமுறை அவர் எனக்குப் பெரியவர்கள் நடக்கப் பயன் படுத்தும் அழகான ஒரு குச்சியைப் (Walking Stick) பரிசளித்தார் .அந்த குச்சி எந்த வகை மரத்தில் செய்தது என யூகிக்கச் சொன்னார். “அதன் எடை, தரம் மற்றும் சிறந்த தோற்றத்தின் அடிப்படையில், அது தேக்கு மரமாக இருக்கலாம்” என்று நான் சொன்னேன். பனைமரம் என்று அடக்கமாகச் சொல்லிச் சிரித்தார். நான் ஆச்சரியப்பட்டேன். பனை மரத்தில் செய்த பொருட்களில் கூர்மையான ஊசிகள் போன்ற சிறாக்கள் இருக்கும். பொதுவாகப் பனை மரத்தைத் தொடுவது ஆபத்தானது. இந்த முட்கள் கைடின் என்ற வலுவான பொருளால் ஆனது . அது எளிதில் உள்ளங்கையைக் குத்திக் கிழித்து விடும். அதனால் பனை மரத்தைப் பயன்படுத்தி சிற்பம் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்வது இல்லை. ஆனால் இவர் பனை மரத்தைப் பயன் படுத்தி சிற்பங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்வதற்கான தொழில்நுட்பத்தை அவர் கண்டுபிடித்துள்ளார். இது ஒரு தரமான கண்டுபிடிப்புதான்.
இவருடைய கல்வித் தகுதியை உங்களால் யூகிக்க முடிகிறதா? இவர் 3 ஆம் வகுப்பு மட்டுமே படித்தவர். ஆனால் இவர் ஆறு புத்தகங்களை எழுதியுள்ளார், மேலும் இரண்டு புத்தகங்களையும் எழுதி வருகிறார். அவரது புத்தகங்களில் ஒன்று ஒளியின் பண்புகள் பற்றிய அவரது சொந்த எண்ணங்களை விவரிக்கிறது. கண்டுபிடிப்புகளை உருவாக்கக் கல்வித் தகுதிகள் தேவையில்லை என உணர்வைத் தார்.
இன்று சிற்பி அவர்களின் அம்மாவின் 54வது நினைவு நாள். இந்நாளில் 65 துப்பரவு தொழிலாளர்களுக்கு மதிய உணவு வழங்கி தன் தாயை நினைவு கூர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன். மேலும் அவருடன் சேர்ந்து மதிய உணவை முடித்தேன்.



