ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் அமையும் இடத்தினை நெல்லை மாவட்ட பயிற்சி கலெக்டர் கோகுல் பார்வையிட்டார்.
ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என மத்திய அரசு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நிதி நிலை அறிக்கையில் அறிவித்தது . இதனால் இந்தியாவில் அமையவுள்ள ஐந்து இடத்தில் தமிழகத்தில் அமைய உள்ள அருங்காட்சியகமாக ஆதிச்சநல்லூர் அமைந்தது. திருச்சி மத்திய தொல்லியல் துறை மண்டல இயக்குனர் முனைவர் அருண்ராஜ் தலைமையில் ஆய்வாளர் யத்தீஸ்குமார், முத்துகுமார் கொண்ட ஆய்வு குழுவினர் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆதிச்சநல்லூர் பரம்பில் மூன்று இடங்களில் அகழாய்வு செய்து அங்கு கிடைத்த பொருள்களை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். உள்ளது உள்ளபடியே காட்சி படுத்தவும் ஏற்பாடு செய்து வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் வாழ்விடங்களை தேடி திருக்கோளூர் பகுதியில் அகழாய்வு நடந்து வருகிறது.
இந் நிலையில் ஆதிச்சநல்லூர் திருக்கோளூர் பகுதிகளை பார்வையிட திருநெல்வேலி பயிற்சி கலெக்டர் கோகுல் வருகை புரிந்தார். அவருக்கு ஆய்வாளர் மணிகண்டன், குமரேசன் ஆகியோர் விளக்கமளித்தனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆதிச்சநல்லூர் முன்னால் பஞ்சாயத்து தலைவர் சங்கர்கணேஷ், ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக்அப்துல் காதர், தொல்லியல் துறையை சேர்ந்த வினித் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பயிற்சி மாவட்ட ஆட்சி தலைவர் மாற்று திறனாளியாக இருந்தாலும் ஆதிச்சநல்லூர் குழிகளுக்குள் மிகவும் ஆர்வமாக இறங்கி பார்வையிட்டு, ஆய்வாளர்களிடம் சந்தேகம் கேட்டு அடுத்த கட்டம் குறித்து கேட்டறிந்தார். இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதன் பின் அவர் திருக்கோளூர் அகழாய்வு நடைபெறும் இடத்தினை பார்வையிட செய்ய கிளம்பினார்.


