குரும்பூர் அருகே அம்மன்புரத்தில் உள்ள சுனையில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆதி லெட்சுமணன் மகன் மணிகண்டன் (28), கொத்தனார் டைல்ஸ் ஒர்க் செய்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா (எ) கிருஷ்ணம்மாள். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் தசரா திருவிழாவிற்கு மாலை அணிந்து குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று அவர் குடும்பத்துடன் குரும்பூர் அருகே அம்மன்புரத்தில் உள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது மணிகண்டன் அங்குள்ள சுனையில் இறங்கியுள்ளார். அவருக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்ததால் தண்ணீரில் அதிக நேரம் குளிக்க வேண்டாம் என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
ஆனால், அதையும் மீறி அவர் சுனையில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து குரும்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


