அயன்ராஜாபட்டி கிராமத்தில் தானியங்கி கிராம பால் கொள்முதல் மையத்தினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஊராட்சி ஒன்றியம் அயன்ராஜாபட்டி கிராமத்தில் இன்று (30.04.2025) தானியங்கி கிராம பால் கொள்முதல் மையத்தினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இ.ஆப., திறந்து வைத்து, கறவை இயந்திரம், பாலின் தரத்தினை பரிசோதிக்கும் கருவிகளை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமுள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில், புதூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய 02 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் HCL நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதாவது, புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 44 ஊராட்சிகளையும், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 51 ஊராட்சிகளையும் தத்தெடுத்து, 95 ஊராட்சிகளுக்கும் தேவையான குடிநீர், சுகாதாரம், கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், இப்பகுதிகளில் உள்ள கால்நடை வளர்ப்போர்களை ஊக்குவித்து பால் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக தானியங்கி கிராம பால் கொள்முதல் மையங்கள் ஏற்படுத்தி, கால்நடை வளர்ப்போர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பால் உற்பத்திக்கான புரதப் பொருட்கள், பால் கேன், சைலேஜ் தீவனம் வழங்கி அசோலா தீவனப் படுக்கைகள் அமைத்து, விதைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், HCL நிறுவனத்தினுடைய சமூகப் பங்களிப்பு நிதியிலிருந்து செயல்படக்கூடிய முன்னோடி மிக முக்கிய திட்டமான சமுதாய திட்டத்திலிருந்து இங்கு நமக்கு தேவையான கிராம பால் கொள்முதல் நிலையத்தை அமைத்து தந்திருக்கிறார்கள். இந்த கிராம பால் கொள்முதல் நிலையம் அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தினுடைய கொள்முதல் நிலையங்களின் ஒரு அலகாக செயல்படும்.
இதை பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கமாக நாம் பதிவுசெய்து அதில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் அனைவருக்கும் பால் விற்பனை செய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தித் தரலாம். ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் இது, தவிர இது போன்ற சமூகப் பங்களிப்பைப் பெற்று பால் உற்பத்தியை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நமது மாவட்டத்தில் பால் உற்பத்தி குறைவாக இருக்கிறது. அதற்கு பால் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு முன் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. பொதுவாக ஒரு கிராமப் பொருளாதாரத்தில் விவசாயம் தான் மிக முக்கியமான வருமான ஆதாரமாக இருக்கும். ஆனால் அதைவிட அதிகமான வருமானம் தரக்கூடிய ஆதாரமாக கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் சார்ந்த பிற தொழில்களாகும். ஒரு குடும்பத்தில் இரண்டு கறவைமாடுகள் இருந்தால் போதும்.
அந்த குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளக்கூடிய வகையில் அதிலிருந்து வருமானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே கால்நடை வளர்த்து வந்தாலும் தங்களது தொழிலை மேலும் அபிவிருத்தி செய்துகொள்ளும் வகையில் தேவையான கடனுதவிகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று ஆடு வளர்ப்பதற்கும் 40 ஆயிரம் ரூபாய் வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்தொழிலில் செலுத்தியுள்ள முதலீட்டை மிகவும் குறுகிய காலத்தில் இரட்டிப்பாக்கக்கூடிய ஒரு தொழில் ஆடு வளர்ப்புத் தொழில். எனவே விருப்பமுள்ளவர்கள் மகளிர் சுய உதவிக்குழு வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
அதேபோல், 50 கோழிக்குஞ்சுகள் வளர்ப்பிற்கும் 15 ஆயிரம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் வங்கிக் கடனுதவி பெற்று பயன்பெறலாம். அதுமட்டுமல்லாமல் கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு, கொள்முதல் செய்யும் முறை, இலாபகரமான விற்பனை, சத்துமிகுந்த தீவன ஊட்ட முறை உள்ளிட்டவை குறித்து உரிய பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக கால்நடை பராமரிப்புத்துறை, மகளிர் திட்டம், ஆவின் நிறுவனம் மற்றும் கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து கூட்டுறவுத்துறையின் வழியாக நமது மாவட்டத்தில் மட்டும் முன் முயற்சி எடுத்துள்ளோம். அந்த வகையில், புதூர் மற்றும் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கால்நடை வளர்ப்போர்களை ஊக்குவித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி பங்களிப்பை வழங்கிவரும் HCL நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சிறப்பு முன்முயற்சி திட்டத்தில் எந்த அளவிற்கு மகளிர்கள் அதிகளவில் பயன்பெற்று வெற்றிகரமான திட்டமாக மாற்றுகிறீர்களோ அதன் மூலமாக உங்களுடைய வருமானம் தற்போது உள்ள நிலையிலிருந்து ஒரு மடங்கு உயர்வதற்கான வாய்ப்பு வசதிகள் உள்ளன. எனவே, அனைத்து மகளிர்களும் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே, இந்த நல்ல நிகழ்விற்கு என்னை அழைத்து, நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து இருக்கக்கூடிய HCL நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, தலைமை செயல் அலுவலர் (HCL) விஸ்வலிங்கம், ஆவின் பொது மேலாளர் ராஜகுமார், துணைப் பதிவாளர் (பால் வளம்) சுரேஷ், எட்டயபுரம் வட்டாட்சியர் சுபா மற்றும் அரசு அலுவலர்கள், HCL நிறுவன பணியாளர்கள், பொதுமக்கள், விவசாய பெருமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


