விக்கிரம் அம்பாலால் சாராபாய் (ஆகஸ்ட் 12, 1919 – டிசம்பர் 30, 1971) என்பவர் இந்திய இயற்பியலாளர் ஆவார். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். 1969 ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார்.
1919 ஆம் ஆண்டு ஆகத்து 12 அன்று ஆமதாபாதில் ஒரு செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தார். அவர் எண்ணியிருந்தால் ஒரு தொழிலதிபராக உருவாகியிருக்கலாம். ஆனால் அவரது நாட்டம் எல்லாம் கணிதத்திலும், இயற்பியலிலும் தான் இருந்தது.
இங்கிலாந்தில் பி. எச். டி ஆராய்ச்சியை முடித்துத் திரும்பிய சாராபாய், ஆமதாபாதில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை 11 நவம்பர் 1947 இல் நிறுவினார். 1955 இல் காசுமீரம் குலுமார்கில் அதன் கிளை ஒன்றையும் நிறுவினார். பின்னர், திருவனந்தபுரம், கோடைக்கானல் ஆகிய இடங்களிலும் ஆய்வகங்களை நிறுவினார்.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமாக இருந்தார். SITE எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி’ மூலம் 2,4000 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை விரிவாக்கினார்.


