இரமண மகரிசி (டிசம்பர் 30, 1879 – ஏப்ரல் 14, 1950) தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார். அத்வைத வேதாந்த நெறியைப் போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள, ஸ்ரீ ரமண ஆசிரமம் உலகப் புகழ் பெற்றதாகும்.
இவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 1879ம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு நாகசுவாமி என்கிற மூத்த சகோதர் உண்டு. இவரது இயற்பெயர் வேங்கடராமன் ஆகும். இவர் மதுரையில் ஸ்காட் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.
ஒருமுறை உறவுமுறைப் பெரியவர் ஒருவர் திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்க அவர் வாயிலாகத் திருவண்ணாமலை பற்றிய ஆவல் அதிகரித்தது. பின்னர் பெரியபுராணம் போன்ற நூல்களைப் பயின்று வர, இறையடியார்கள் மீதும், இறைவனைப்பற்றி அறிதலிலும் நாட்டம் ஏற்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லும் பழக்கமும் ஏற்பட்டது.
இவ்வாறு ஆன்மிகத் தெளிவு பெற்ற பின் தன் சுற்றமெல்லாந் துறந்துவிட்டு இரயில் ஏறி 1896ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று திருவண்ணாமலையை வந்தடைந்தார். அங்கு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில் சிறிது காலம் தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்த பாதாள லிங்கத்தினருகில் சென்று தியானத்தமர்ந்தார். அங்குச் சிறுபிள்ளைகளின் விசமச் செய்கைகளிலிருந்து சேஷாத்ரி சுவாமிகள் அன்பர்களின் மூலம் காத்தார். பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாச்ரமம், மாமரக் குகை, குருமூர்த்தம் எனப் பல இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலையடிவாரத்தில் தங்கினார். அங்கேயே ரமணாச்சிரமம் உருவானது. இவரது சீடர்களில் ஒருவரான காவ்ய கண்ட கணபதிமுனி என்ற சமஸ்கிருத பண்டிதர் ஒருவராலேயே இவருக்கு ”இரமண மஹரிஷி” எனப் பெயர் சூட்டப்பட்டது. அதுவரை அவரை பிராம்மண சுவாமி என்றே அழைத்தனர்.


