விரைவில் தென்மதுரா(ரை) எனக் கருதப்படும், தருவைக்குளம் கடல் பகுதியில் கடல் சார் தொல்லியல் அகழாய்வு பணி துவங்கும் என்று தூத்துக்குடி – வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது : இராபர்ட் ஓரம் 1778ம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ பரிவர்த்தனை ஆவணத்திற்கு மிக நேர்த்தியாக வரைந்து ஆவணப்படுத்தியுள்ள கன்னியாகுமரி முதல் கொல்லிடம் வரை என்ற தலைப்பிலான வரைபடத்தின் புள்ளிகள் அடிப்படையிலும் மற்றும் நாங்கள் 22.08.2025 (அம்மாவாசை) அன்று மேற்கொண்ட கள ஆய்வின் போது மீனவ நண்பர்கள் அளித்த சில முக்கிய வரலாற்று புரிதல்கள் அடிப்படையிலும் பார்த்தால் தருவைக்குளம் கடற்கரை பகுதியில் இருந்து வான்தீவு மற்றும் கரசேவர் தீவு வரையிலான சுமார் 11,431 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் தீவுகள் மற்றும் இடைப்பட்டபகுதியில் சராசரியாக சுமார் 5 அடி ஆழத்தில் தொடர் மணல் திட்டு போன்ற நிலப்பரப்புகள் தெண்படுகின்றன.
பிரதி அம்மாவாசை அன்று அவை சற்று தெளிவாக தென்படுகின்றன. மேலும் இராபர்ட் ஓரம் -1778 ம் ஆண்டு வரைந்த வரைபடத்திலுள்ளதை விட தீவுகளின் அளவு சுருங்கிவிட்டது என்பதனை இணைப்பில் உள்ள ஆய்வு புகைப்படங்கள் மற்றும் கணக்கீடுகள் வாயிலாக நம்மால் உணரமுடிகின்றது.
மற்ற கரையோர அளவீடுகளை 247 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகவும், கிட்டதட்ட தற்போதுள்ள செயற்கைகோள் அளவீடுகளோடு பொருத்தமாகவும் அமைந்துள்ளது என்பது நமது 13ம் நூற்றாண்டில் இந்த மண்ணில் மறைந்த கீழ்பட்டினம் மற்றும் அதனை சார்ந்த கடற்கரை பகுதிகளின் மாற்றங்கள் குறித்த ஆய்விற்கு கிடைத்த மிக சிறந்த பொக்கிஷம் போன்றதாகும்.
எனது ஆய்வின் போது நமது கிழக்கு கடற்கரை பகுதிகளின் முகத்துவாரங்களான வைப்பார், மலட்டாறு, தாமிரபரணியின் மூன்று முகத்துவாரங்கள் ஆகியவற்றில் பெரிய இயற்கை அழிவு ஏற்பட்டதால் ஏற்பட்ட பின் விளைவுகளின் சுவடுகள் ஆகியவற்றை உணரமுடிந்தது. குறிப்பாக இந்த கீழ்பட்டினத்தின்(பட்டினமருதூர் பகுதி) கழிமுகத்துவாரமாக விளங்கிய மலட்டாறின் வழித்தடம் மாற்றமடைந்து சீவலப்பேரி பகுதி வழியாக தற்போது தாமிரபரணியோடு சங்கமம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்க விளைவு ஆகும்.
இந்த மலட்டாறால் அடித்துவரப்படும் வண்டல் மண் படிமங்களால் இயற்கையால் பராமரிக்கப்பட்ட இந்த பகுதியின் தீவுகள் அனைத்தும், இந்த நதியின் ஓட்டம் இல்லாததால் கொஞ்சம் கொஞ்சமாக உறுக்குழைந்து பரப்பளவு சுருங்கிவிட்டன என்பது துரதிர்ஷ்டமானதாகும்.இதே நிலை நீடித்தால் விரைவில் இவைகளும் காணமுடியாமல் ஆகிவிடும்.
இந்த வளித்தடத்தினை மீட்டெடுத்திட கனிசமான வெள்ள நீரினை முறம்பன் பகுதியில் இருந்து தருவைக்குளம் மற்றும் வெள்ளப்பட்டி பகுதிகள் வழியாக கடலினுள் அனுப்பிவிடலாம். மேலும் இந்த பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும், நமது தூத்துக்குடி மாநகர் பகுதிகளும் தொடர் பெரும் வெள்ளப்பாதிப்புகளில் இருந்து மீட்க்கப்படும்.
உதாரணமாக 17.12.2023 அன்றைய மிகப்பெரிய வெள்ளத்திற்கு பின்பு இந்த மூழ்கடிக்கப்பட்ட தீவுப்பகுதிகளின் மேல்பரப்பில் அதிக அளவிலான வண்டல் மண் படிமங்கள் திட்டுகளாக நீண்ட நாட்களாக படிந்து இருந்ததாகவும், தொடர்ச்சியாக நீர் மற்றும் வண்டல் மண் வரத்து இல்லாததால் அவை மீண்டும் அலையில் கரைந்து பழைய நிலைக்கு வந்துவிட்டன என்பது மீனவ நண்பர்களின் கருத்துக்களாக உள்ளன.
முன்பெல்லாம் வத்துப்பாடு எனப்படும் நீர்மட்டம் குறைவான காலங்களில் வான்தீவு வரை மக்கள் சென்று அங்குள்ள புனிதர்.நிக்குலோஸ் ஆலயம் சென்று வந்ததாகவும், இத்தகைய மணல் திட்டுகளின் நீட்சியானது நமது மலட்டாறின் முகததுவாரம் முதல் தெற்கே வெள்ளப்பட்டி கடற்கரை பகுதிவரையிலும், கிழக்கே தீவு வரையிலும் மட்டுமே காணமுடிகிறது என்பதும் அவர்களின் கூடுதல் தகவல்கள் ஆகும்.
இந்த மலட்டாறு வழித்தடம் தொடர்பான மீட்டெடுப்பு குறித்த எங்கள் தொடர் கோரிக்கைகளை உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு ஆவன செய்திட வேண்டியும், தருவைக்குளம் கடற்கரை பகுதியில் இருந்து வான்தீவு மற்றும் கரசேவர் தீவு வரையிலான சுமார் 11,431 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் தீவுகள் மற்றும் இடைப்பட்ட பகுதியில் கடல்சார் -நீரில் மூழ்கி அகழாய்வு பணிக்கு பரிந்துரை செய்து, கடலுக்குள் மூழ்கியுள்ள நமது தென்மதுரா(தென்மதுரை) என கருதப்படும் பண்பட்ட நாகரீத்தின் வரலாற்று எச்சங்களை கண்டெடுத்து தமிழர்களின் குறிப்பாக விருஷிணி(வாசுதேவன்) குல மன்னர்களாகிய நம் பாண்டியர்களின் இருண்ட காலங்கள் குறித்த உண்மைகளை கடல் ஆய்வு முலமாகவும் இந்த உலகிற்கு பரைசாற்றிட உதவிட வேண்டி பணிகின்றோம்.
முன்னர் இந்த மூன்று தீவுகளின் பரப்புகள் நிச்சயமாக ஒரே நிலபரப்பாக ஓர் மிகப்பெரிய தொன்மையான வர்த்தக தளமாக விளங்கியிருக்கவேண்டும் என்பது இதுவரை பட்டினமருதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கண்டெடுத்து ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்று தொன்மங்கள், கல்வெட்டுகள், தொன்மையான பெருமாள் ஆலயங்கள், வேள்விக்குடி செப்பேடுகள் மற்றும் இந்த சங்ககால குறிப்புகள் போன்ற விளக்கிகள் கொண்ட வரைபடம் ஆகியவற்றின் அடிப்படையிலான எங்கள் கருத்துக்கள் ஆகும்.
இது தொடர்பான பகுப்பாய்வு மற்றும் கள ஆய்வு கட்டுரைகள் வாயிலான கோரிக்கைகளை ஏற்று மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை கடிதம் 25.09.2025 அன்று தமிழக தொல்லியல் துறையின் இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


