தூத்துக்குடி மாநகராட்சி பெயர்ப்பலகையில் உள்ள கிறிஸ்தவ சபையின் பெயரை நீக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் தெற்கு மண்டல தலைவர் சதீஷ் தலைமையில் நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையரிடம் அளித்த மனுவில், “தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சாந்தி நகர் 3வது தெரு பகுதியில் மாநகராட்சியின் சார்பில் தெரு பெயர் பலகை (ஸ்டீல் போர்டு) வைக்கப்பட்டுள்ளது.
இதில் தெருவின் பெயரை சிறிதாக உச்சரித்து கிறிஸ்தவ மிஷினரி நடத்தும் AG சபை என்று பெரியதாக அச்சடித்து போர்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி மாநகராட்சி AG சபை சாந்தி நகர் 3வது தெரு என்று பெயர் பலகை உள்ளதால் மாநகராட்சி நிர்வாகமே AG சபையை நடத்துகிறதா? என்றும் என்ன தோன்றுகிறது.
ஒவ்வொரு பகுதிக்கும் மக்கள் வரிப்பணத்தில் மாநகராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து பெயர் பலகை வைக்கப்படுகிறது. அதில் தெருவின் பெயர் முக்கியத்துவம் படுத்தப்பட வேண்டும், அல்லது அவ்விடத்தில் அரசு அலுவலகங்கள், ரேஷன் கடைகள் போன்ற அத்தியாவசிய அரசு பொது பயன்பாடு இடங்கள் ஏதேனும் இருப்பின் அதை தவிர வேறு எந்த தனியார் நிறுவனத்திற்கும் மாநகராட்சி நிர்வாகம் முக்கியத்துவம் தரக்கூடாது.
எனவே,கிறிஸ்தவ மிஷனரி பெயரை பெரிதாக போட்டு வைக்கப்பட்ட தெரு பெயர் பலகை போர்டை அகற்றி விட்டு மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்ட போர்டில் பொதுமக்கள் பயன்பெறும் வண்ணம் தெருவின் பெயரை பெரியதாக உச்சரித்து பெயர் பலகை வைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர் இசக்கி முத்துக்குமார், மேற்கு மண்டல தலைவர் சரவணகுமார், செயலாளர்கள் சுதாகர், பரமசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.


