எப்போதுமே சென்னை சென்றால் மெரினா பீச் செல்லவேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. நான் மும்பைக்கு 1984 ல் வேலைக்கு செல்லும் போதே அந்த ஆசை உண்டு. எக்மோரில் இறங்கி சென்ரலில் மும்பை ரயில் ஏற காத்துக்கிடப்போம். ஆனால் மெரினா பீச் எங்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. அதன் பின் பல்வேறு வாய்ப்புகள் சென்னை செல்ல வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மெரினா பீச் செல்ல ஆசைப்படுவேன். வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் நமது ஊருக்கு வரும் பேருந்து பாரீஸ் கார்னரில் இருந்து இயங்கும். அந்த வேளையில் பேருந்து மெரினா கடற்கரை சாலை வழியாக செல்வார்கள். அப்போது இதுதான் மெரினா பீச் என்று பார்த்து விட்டு செல்வோம். இதற்கிடையில் 1996 ல் சாத்தான்குளம் எம்.எல்.ஏ மணிநாடாரிடம் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தேன். அப்போது அலுவல் காரணமாக சென்னை எம்.எல்.ஏ விடுதியில் தங்கியிருப்பேன். தலைமை செயலாகத்துக்கும் செல்வேன். அப்போது கூட அந்த வழியாகத்தான் செல்வேன். மெரினா பீச் உள்ளே செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. காலங்கள் கடந்தது. எழுத்தாளராக வளர்ந்தேன். சென்னைக்கு பல தடவை விருது வாங்கவும், தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கவும்,சினிமாவுக்-கு டப்பிங் பேசவும் அடிக்கடி வருகிறேன். அந்த சமயத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதாஆகியோரின் நினைவிடத்தினை பார்த்து இருக்கிறேன். ஆனால் மெரினா பீச் போகவே இல்லை. மெரினா பீச் என்பதை சினிமாவில் பார்த்தது. ஏதாவது ஊடகத்தில் பார்த்தது. அங்குள்ள உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலையை சாலையில் செல்லும் போது பார்த்தது. சினிமாவில் வடிவேல் கமெடியில் குதிரை சவாரி செய்ததை பார்த்தது என காலம் கழிந்து விட்டது. எனது மனதுக்குள் மெரினா செல்ல ஆசைத்தான். வாய்ப்பு எப்போது கிடைக்குமோ என காத்திருந்தேன்.
இந்த சமயத்தில் தான் எனது மகன் அபிஷ் சொன்னான். “அப்பா நீங்கள் மெரினா பீச் இதுவரை போகவில்லை என்றீர்களே . போய் பார்த்து விட்டு வருவோமா?” என்று கேட்டான். உடனே சரி என்று கூறி விட்டேன். நாங்கள் பாண்டி பஜாரில் இயக்குனர் மந்திர மூர்த்தி அய்யா அலுவலகத்தில் இருந்து அபிஷ் பைக்கில் மெரினா நோக்கி கிளம்பினோம். இந்த பைக் இருப்பது எவ்வளவு வசதியாக போய் விட்டது.
கூகுள் மேப் எங்களுக்கு வழிகாட்டியது. கிட்டத்தட்ட 15 நிமிடத்தில் மெரினா வந்து சேர்ந்தோம். உள்ளே வாகனங்கள் விட என இடம் இருந்தது. ஆனால் எந்த இடத்தில் வாகனத்தினை விடுகிறோம் என்பதை அடையாளம் வைத்து விட வேண்டும். இல்லையென்றால் பல கிலோ மீட்டர் நடந்தே நமது வாகனத்தினை தேட வேண்டிய நிலை ஏற்படும்.
மெரினா மிகப்பிரமாண்டமாக இருந்தது. மெரினா இந்தியாவின் சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறக் கடற்கரை ஆகும். இதன் நீளம் 13 கி.மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரினா, இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரை ஆகும். மும்பை நகரின் பாறைகள் நிறைந்த ஜுகு கடற்கரையைப் போன்று அல்லாமல், மெரீனா கடற்கரை மணற்பாங்காக உள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால், இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. 2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களுக்குப் பிறகு இங்கு அனுமதியின்றிப் போராட்டங்கள் நடத்துவதற்கு சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.
சென்னைத் துறைமுகம் கட்டப்படும் முன்பு, மெரினா கடற்கரை வெறும் களிமண் தொகுப்பை உடையதாக இருந்ததாம்.
சுவாமி விவேகானந்தரின் சென்னை இல்லறச் சீடர்களில் ஒருவர் கிருஷ்ண சுவாமி அய்யர். இவர் 1890களில் தென்னக ரயில்வே, மயிலாப்பூரையும், கிண்டியையும் மெரினா வழியாக இணைத்து ஒரு இரயில் தடம் செல்ல தீர்மானம் நிறைவேற்றி, 1903 இல் வேலை தொடங்கும் சமயம் அதனை எதிர்த்து மாபெரும் கூட்டம் கூட்டினார். “இந்தக் கடற்கரைதான் சென்னை நகரத்தின் நுரையீரல்; இதை அழித்தோமானால் நம்மை வருங்கால சந்தியினர் மன்னிக்க மாட்டார்கள்” என்று கூறினார். மெரீனாவைக் காப்பாற்றுவதற்காகக் கூடிய மக்கள் கூட்டத்தைக் கண்டு ஆங்கிலேய அரசும் அஞ்சியது. இதனை அடுத்து அரசாங்கமும் அத்திட்டத்தினைக் கைவிட்டது.
சென்னையின் முக்கிய பகுதியான இக்கடற்கரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நடைபெறுகின்றன. இந்தியாவின் பெரிய ஓட்டமாகிய சென்னை மாரத்தானும் இங்கு நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்பர். பொங்கல் திருநாளில் மக்கள் தங்கள் உறவினர்களுடன் கூடி மகிழும் இடமும் இதுவே. சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாட்களில் அரசுத் துறைகளின் அணிவரிசையும் இங்கு நடைபெறும்.
மெரினா கடற்கரையை ஒட்டிய காமராசர் சாலை ஆறுவழிப் பாதையாகும். கடற்கரையின் எதிர்புறம் கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் ஆகிய தொடர்வண்டி நிலையங்களும், விவேகானந்தர் இல்லம், சாந்தோம் ஆகிய பேருந்து நிறுத்தங்களும் உள்ளன. அண்ணா சதுக்கத்தில் இருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு பேருந்து வசதிகளும் உள்ளன. சுற்றுலா பேருந்துகள் இங்கு நின்றே செல்லும்.
இதையெல்லாம் கூகுள் மூலம் நான் அறிந்து வைத்திருந்தேன். எனவே அதை அசைப்போட்டுக்கொண்டே பீச் உள்ளே சென்றோம். நடக்க நடக்க கடற்கரை விரிந்து கொண்டே போனது. வடிவேல் படத்தில் காட்டிய குதிரை எங்களை சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து கடற்கரை சென்றோம். அங்கே பல கடைகள் இருந்தது. அதில் மீன் கடைகள் மிக பிரபலமாக இருந்தது. எண்ணிக்கையில் அதிகமாகவும் காணப்பட்டது. கடற்கரையில் மக்கள் கடல் நீரில் கால் நனைத்து விளையாடிக்கொண்டிருந்தனர். அங்கே இரண்டு குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. தீடீர் அலை அடித்து அந்த குழந்தைகளை இழுத்து சென்றது. அப்போது அங்கு வந்த வெளிநாட்டு பெண் பயணி அந்த குழந்தைகளை காப்பாற்றி வெளியே விட்டார். ஆனால் அந்த குழந்தையின் பெற்றோர்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் அங்கே நின்றார்கள். மீண்டும் குழந்தைகள் அலையில் கால் நனைத்து விளையாட ஆரம்பித்தது. அந்த குழந்தைகள் எப்போதும் அங்கேயே நிற்கும் குழந்தை போல, வெளிநாட்டு பயணி அதை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு அலையில் கால் நனைத்து விளையாட ஆரம்பித்தார்.
எனது மகன் மீன் கடைக்கு போலாம் என்றான். அங்கே வந்தோம் வித விதமான மீன்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். அந்த மீன்களை நனைத்து காயவிடாமல் ஊழியர்கள்தண்ணீர் ஊற்றி வைத்துக்கொண்டிருந்தனர். ஒருபக்கம் வாடிக்கையாளர்கள் கேட்கும் மீன்களை பொறித்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள். 50 ரூபாயில் துவங்கி 600 ரூபாயை தாண்டியும் மீன்கள் விற்பனைக்கு இருந்தன. அபிஷ் அதை வாங்கி சாப்பிட்டான். எனக்கும் கொஞ்சம் சுவைக்க தந்தான். நன்றாகத்தான் இருந்தது.

இதற்குள் இருட்டி விட்டது. குழந்தைகளோடு வந்தவர்கள் கரையை நோக்கி கிளம்ப ஆரம்பித்தனர். சில ஜோடிகள் எதையோ எதிர்பார்த்து ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். நாங்களும் வேகமாக வெளியே வந்தோம். நான் ஏற்கனவே கூறிய படி மோட்டார் பைக்கை விட்ட இடத்தினை அடையாளம் கண்டு வைத்திருந்தோம். எனவே கண்டு பிடித்து விட்டோம். பலர் எங்கே பைக்கை விட்டோம் என தெரியாமல் தேடிக்கொண்டிருந்தனர். இங்குள்ள கழிவறை மிகவும் சுத்தமாக இருந்தது. இது எங்களுக்கு ஆச்சரியத்தினையும், சந்தோசத்தினையும் கொடுத்தது. இதுபோல தமிழகத்தில் பொது இடத்திலும் பேருந்து நிலையத்திலும் உள்ள அனைத்து கழிவறைகளும் சுத்தமாக இருந்தால் எப்படி இருக்கும். அரசு நினைத்தால் இப்படி சுத்தமாக வைத்திருக்க முடியும் என்பதற்கு உதாரணம் இந்த கழிவறை.
மொத்தத்தில் மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கிராமத்தில் இருந்து எனது சொந்தகாரர்கள் சென்னை சென்றால் மறுநாள் மெரினா பீச் போனோம் என்று என்னிடம் வந்து கதை கதையாக கூறுவார்கள். எனக்குத்தான் இதுவரை கிடைக்காத அனுபவம் 58 வது வயதில் மெரினா பீச் பார்க்–கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனது மகனிடம் சொன்னேன் , “உன்னால் உலகில் மிகப்பெரிய பீச்சை பார்த்து விட்டேன்” என்றேன். அவன் சிரித்துக்கொண்டே “பொய் சொல்லாதீங்க அப்பா. எத்தனை தடவை சென்னை வந்தீர்கள். மெரினாவை பார்க்காமலா இருந்தீங்க”. என்றான். நீங்களும் அப்படித்தானே நினைப்பீர்கள்.- முத்தாலங்குறிச்சி காமராசு


