அயோத்தி பட இயக்குனர் மந்திர மூர்த்தி அவர்களுடன் சென்னையில் ஒரு நாள் நெல்லை மண்ணின் மைந்தன், சங்கணாங்குளத்தினை சேர்ந்த திரைப்பட இயக்குனர் மந்திர மூர்த்தி. மிகவும் பிரபலமான அயோத்தி படத்தின் இயக்குனர் இவர். இவர் முதல் படத்திலேயே அனைவராலும் கவனிக்கப்பட்ட இயக்குனராகி விட்டார். வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும், உள்ளூரிலும் பிரபலமாக அறியப்பட்ட இவருக்கு ஒரு துளி கூட கௌரவம் கிடையாது. அதை நான் பல முறை அறிந்துள்ளேன். சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்க பொதுச்செயலாளர் சங்கர் மணி மூலமாக அறிமுகமான நாளில் இருந்து இதுவரை எங்கள் பயணம் தொடருகிறது. உள்ளூர் மக்கள் அவரை காண வந்தால் அவர்களோடு ஒன்றி போய் விடுவார். அதுவும் என்னை போன்ற எழுத்தாளர்களை அவருக்கு மிகவும் பிடிக்கும். சென்னையில் நானும் என் மகன் இந்துஸ்தான் கல்லூரி உதவி பேராசிரியருமான அபிஷ் விக்னேஷ் இருக்கிறோம் என்றவுடன் எங்களை தனது பாண்டிபஜார் அலுவலகத்துக்கு வரவழைத்தார். அங்கே அவரது நண்பரும் உதவி இயக்குனருமான தூத்துக்குடி மாவட்டம் சிங்காத்தா குறிச்சியை சேர்ந்த கொடி முத்துவும் இருந்தார். எங்களுக்கு மிகவும் பிரமாதமான மதிய உணவு உபசரிப்பு நடந்தது. நமது ஊர்கள் சம்பந்தப்பட்ட நிறைய விசயங்களை பேசினார். உள்ளூரில் படைப்பு இலக்கிய விருது கிடைத்தது குறித்தும், வெளிநாடு சென்று பரிசு பெற்றது கூறித்தும் பேசினார்.
தீடீரென எங்களை பார்த்து “எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீட்டை பார்த்து இருக்கிறீர்களா?” என கேட்டார். “அய்யோ இல்லையே” என்றேன். “உடனே வாருங்கள் அதை பார்த்து விட்டு வந்து விடுவோம்” என நால்வரும் கிளம்பினோம். அடுத்த தெரு தான், அதற்கு ஆற்காடு தெரு என்று பெயர் . அங்கே தான் எம்.ஜி.ஆர் அலுவலகம் இருந்த இடம் இருந்தது. உள்ளே நுழைந்தோம். நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது. நன்றாக பராமரித்து வைத்திருக்கிறார்கள். உள்ளே நுழைந்த வுடன் எம்.ஜி.ஆர் அவர்கள் பயன்படுத்திய கார் எங்கள் கண்ணில் பட்டது. அதன் பின் அவர் பயன்படுத்திய பொருள்கள் அனைத்தும் வைத்திருந்தார்கள். அவர் அணிந்த உடை, வாட்சு, கண்ணாடி, தொப்பி என எங்கள் கண் முன்பே எம்.ஜி.ஆர் வாழ்வது போலவே உணர்ந்தோம். அவர் நடித்த அனைத்து படங்களில் போஸ்டர் தொகுப்பை கண்டு மகிழ்ந்தோம். உள்ளே புகைப்படம் எடுக்க எங்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் புகைப்படம் எடுக்க என ஒரு புகைப்பட கலைஞர் உள்ளே இருக்கிறார். அவர் பெயர் ஆண்டவர். தீவிர எம்.ஜி.ஆர் பக்தர். எம்.ஜி.ஆர் படத்தினை தவிர வேறு எந்த படத்தினையும் அவர் பார்த்ததே கிடையாதாம். . அவர் மிகவும் நகைச்சுவையாக பேசினார். ஆனால் கோபக்காரராகவும் இருந்தார்.

எம்.ஜி.ஆர் வளர்த்த சிங்கத்தினை அங்கே பாடம் செய்து வைத்திருந்தார்கள். அதன் அருகே நின்று படம் எடுத்தோம். அப்போது எங்கள் இயக்குனர் கழுத்து லோசக சரிந்திருக்கிறது என அப்படி நில்லுங்கள் இப்படி நில்லுங்கள் என சத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார். “சிங்கம் வேணுமா? இல்லை நீங்க மட்டும் வேணுமா? ஒழுங்கா நில்லுங்க” என எங்களை மிரட்டினார். ஆனாலும் அவர் மிரட்டல் எங்களுக்கு ஆச்சரியத்தினை வரவழைத்தது.
ஒரு கட்டத்தில் எங்கள் அவர் மிரட்டு வதை கண்டு, நான் “சார் நீங்கள் அப்படி திரும்புங்கள் இப்படி திரும்புங்கள் என்று சொல்கீறீர்களே. அவர் யார் தெரியுமா? மிகப்பெரிய வெற்றியை தந்த அயோத்தி பட இயக்குனர்” என்றேள். “அப்படியா? என்று கூறிவிட்டு, நான் எம்ஜிஆர் படத்துக்கு பிறகு யார் படத்தினையும் பார்த்ததே கிடையாது” என்று சொல்லி விட்டு அவர் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார். படம் எடுத்து எங்கள் செல்போனுக்கு அனுப்ப படத்துக்கு 50 ரூபாய் கேட்டார். பணத்தினை இயக்குனரே கொடுக்க, “இன்று நான் பிரதோசம், சாமி கும்பிடச் செல்கிறேன். செவ்வாய் கிழமை லீவு, புதன் கிழமை காலையில்தான் படத்தினை அனுப்புவேன்” என கண்டிசன் வேறு போட்டார் போட்டோ கிராபர் ஆண்டவர்.
எனக்கே கோபம் வந்தது. மிகவும் பிரபலமான இயக்குனர்கள் யாராக இருந்தாலும் ஆண்டவர் பேச்சை கேட்டால் சண்டை போட்டு விடுவார்கள். ஆனால் மந்திர மூர்த்தி அவர்களோ, “ஆண்டவரே நீங்க எப்போனாலும் அனுப்புங்க. நாங்க வாறோம்” என வெளியே வந்து விட்டார். வெளியே நின்று ஒரு செல்பி படமும் எடுத்துக்கொண்டோம்.
எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பொருள்கள், வாங்கிய பரிசுகள், விருதுகள் என ஆயிரக்கணக்கில் அவரது வீட்டில் இருந்தன. அவர் பயன்படுத்திய அலுவலகம், விளையாட்டு பொருள்கள், அவர் துப்பாக்கி சூடுபட்ட போது கழுத்தில் மாட்டப்பட்ட பேண்டேஜ் என பொருள்களை பார்த்து அசந்ததோடு, அதை பராமரிக்கும் அறக்கட்டளைக்கு நன்றியும் கூறி விட்டு வெளியே வந்தோம்.
வெளியே வந்த நின்ற போது அதே தெருவில் நடிகர் சிவகுமார் வீடு, எம்.ஜி.ஆர் வீட்டை விட பல மடங்கு பெரிதாக இருந்தது. அடுத்த தெருவில் நடிகர்திலகத்தின் வீடு உள்ளது என்றார்கள். அந்த வீட்டுக்குள்ளும் செல்ல அனுமதி பெற வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் புரட்சி தலைவர் வீட்டுக்குள் சொந்த வீட்டுக்குள் நுழைந்தது போல நுழைந்து விட்டு வெளியே வந்தோம். மகிழ்ச்சியாக இருந்தது.
இவ்விடத்தில் இரண்டு விசேஷமானவர்களுடன் பயணித்தோம். யார் என்றே எங்களுக்கு அறிமுகம் இல்லாத புகைப்பட கலைஞர் ஆண்டவர். இவர் எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர். யாருக்காகவும் அவரை அவர் மாற்றிக்கொள்ள மாட்டார். சொன்னபடி புதன்கிழமை காலை 9 மணிக்கு படம் எங்களுக்கு வந்து விட்டது. அப்படியென்றால் மிகவும் நேர்த்தியானவர் அவர் என உறுதி படுத்தி விட்டார்.
அடுத்தது இயக்குனர் மந்திர மூர்த்தி. தமிழ் திரையுலகில் பிரபலமான திரைப்படம் ஒன்றை தந்தால் கூட அவர்களை கையில் பிடிக்க முடியாது. ஆனால் சிறு குழந்தை போல எங்களோடு பயணித்து, யார் என்ன சொன்னாலும் அதை கண்டுகொள்ளாமல் தலை கணம் இல்லாமல் பயணிக்கும் பண்பு மந்திர மூர்த்தி அவர்களிடம் இருந்தது. இருவரையும் வாழ்த்தி விட்டு, அவருக்கு நன்றி கூறி விட்டு சந்தோசமாக சென்னையில் அடுத்த ஒரு முக்கியமான இடத்துக்கு நானும் அபிஷ்விக்னேஷம் கிளம்பினோம். -முத்தாலங்குறிச்சி காமராசு


