தூத்துக்குடியில், தன் மீது பெண்களை வைத்து பொய்யாக பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக வாலிபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி கங்கா பரமேஸ்வரி நகரில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம்பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த தென்மலை தென்குமரன் என்பவர் என்பவர் பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் விடுத்ததாக புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்தாராம். இதைத்தொடர்ந்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், புகார் கூறப்பட்ட தென்மலை தென்குமரன் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், நான் கங்கா பரமேஸ்வரி நகரில் புதிதாக வீடு வாங்கி 2 ஆண்டுகள் ஆகிறது. என் வீட்டின் பின்பகுதியில் ஒரு தொழிற்சாலை உள்ளது. அங்கிருந்து வெளியாகும் இரைச்சல், புகை தொடர்பாக புகார் தெரிவித்த காரணத்தினால் அந்த ஆலை உரிமையாளர் பர்னபாஸ் என்பவர் அங்கு வேலை பார்க்கும் பெண்களை வைத்து என் மீது பொய் புகார் அளித்துள்ளார்.
முதலில் சங்கீதா என்ற பெண் மூலமும், தற்போது வேறு பெண் மூலமும் என் மீது புகார்கள் அளித்துள்ளார்கள். என் மீது இதுவரை 7 வழக்குகள் போடப்பட்டுள்ளது. அதில் 5 சிப்காட் காவல் நிலையத்திலும், 2 அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் உள்ளது. இதுவரை 2 முறை சிறை சென்றுள்ளேன். என்னை சரித்திர குற்றவாளியாக்க பார்க்கிறார்கள். பெண் விஷயத்தில் எந்த ஒரு தவறு செய்யவில்லை என்று தெரிவித்தார்.


