தமிழக அரசு மாணவர்களின் உயர்கல்விக்கு பள்ளி ஆசிரியர்களுக்கு பொறுப்பளிக்காமல் மாணவர்களின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் முஜிபுர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி, கடமையே கண்கண்ட தெய்வம்* என்பதற்கேற்ப ஆசிரியர் பணி என்பது மிகவும் உணர்திறன் மிக்க பணியாகும். அந்தப் பணியினை மேற்கொள்வதற்கு ஆசிரியர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
ஒரு மனிதனை சிறப்பு மிக்க மனிதனாக மாற்ற வேண்டுமெனில் முதலில் அவன் வாழும் சமூகத்தின் சுற்றுச்சூழலை சிறந்ததாக மாற்ற வேண்டும். இன்றைய சூழலில் ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் பணியினை தவிர பல்வேறு பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அதுவும் குறிப்பாக பல்வேறு புள்ளி விவரங்களை திரட்டக்கூடிய பணியிலேயே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றனர்.
ஒருபுறம் முழுமையாக ஆசிரியர்களை கற்றல்,கற்பித்தலில் ஈடுபடாமல் இருக்க செய்வதும், மறுபுறம் உளவியல் ரீதியாக அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதும், இன்னொரு புறம் மாணவர்களின் சமூக சுற்றுச்சூழல் ஆனது நல்ல முறையில் இல்லாதிருப்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் 100% தேர்ச்சி என்பது முரண்பாடான ஒன்று. ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்களுடைய படிப்பதற்கான திறனும் மேலும் அந்தப் படிப்பினை உள்வாங்க கூடிய திறனும் வேறுபட்டே இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை.
அப்படி இருக்கையில் நூறு சதவிகித தேர்ச்சி என்பதே அறிவியலுக்கு முரண்பாடான ஒன்றாகவே உள்ளது. இதனால் மாணவர்களின் மதிப்பெண்களின் அளவிலான தேர்ச்சியோ அல்லது தோல்வியோ பெறுவது என்பது அவர்களின் சமூக சூழலின் ஒரு பகுதியாகும். அப்படியிருக்க ஆசிரியர்களை மட்டும் எப்படி பொறுப்பேற்க வைக்க முடியும். அப்படி இருக்கையில் எந்த ஒரு மாணவனும் தேர்வில் தோல்வி அடைந்தால் அதனுடைய முழு பொறுப்பையும் ஆசிரியரின் மீது சுமத்தவது எந்த விதத்தில் நியாயமாகும்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய பெரும்பாலான குடும்பங்களில் தங்கள் பிள்ளைகளை உயர்கல்வி படிக்க வைப்பதில் ஆர்வம் காட்டாமலேயே இருக்கின்றனர். அத்தகைய பின்புலங்களில் உள்ள குடும்பங்களில் உள்ள மாணவர்களை நாம் கட்டாயப் படுத்தும் பொழுது ஆசிரியர்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
எனவே மாணவர்களின் உயர் கல்விக்கு பள்ளி ஆசிரியர்களை பொறுப்பேற்க செய்யாமல் அரசானது முறையாக தலையிட்டு அவர்களுடைய பொருளாதார, சுகாதார இது போன்ற இதர பிரச்சனைகளை தீர்த்து அவர்களுடைய சமூக சுற்றுச்சூழலை நல்ல முறையில் அமைப்பதன் மூலமே மாணவர்களை உயர் கல்விக்கு எளிதில் கொண்டு வர முடியும். இவ்வாறாக மாணவர்களின் உயர் கல்வி, கல்லூரி கனவு போன்ற போன்ற திட்டங்களுக்கு அரசானது பயன்படுத்துவதன் மூலம் வேலையில்லாத இளைஞர்களுக்கும் வேலை கிடைக்கும்
மேலும் மாணவர்களை மனதளவிலும், உடலளவிலும் ஆரோக்கியமாக கல்வியை கற்பதற்கு ஏற்ற வகையில் சமூக சூழ்நிலையை இந்த சமூகமும், அரசும் சேர்ந்து ஏற்படுத்துமாறு மாநில முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம் என மாநில துணைத் தலைவர் முஜிபுர் கூறியுள்ளார்.


