கொச்சி-தூத்துக்குடி வரை குமரி மாவட்டம் வழியாக இயற்கை எரிவாயு குழாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடுகளுக்கு தடையின்றி கேஸ் கிடைக்கும் எனற தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் ஹார்முஸ் நீர்சந்தி மூடல் போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன. குறிப்பாக வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவிய சூழலில், ஒரு சிலிண்டரை ரூ.7,000 வரை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு உணவக உரிமையாளர்கள் தள்ளப்பட்டனர்.
இந்தச் சிக்கலைத் தீர்க்க மக்கள் இயற்கை எரிவாயுவிற்கு (PNG) மாற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது. தற்போது பெருநகரங்களில் மட்டுமே உள்ள இந்த வசதியை விரிவுபடுத்தும் வகையில், இந்திய ஆயில் கார்ப்பரேஷன் (IOC) நிறுவனத்திற்குப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
கே.டி.பி.எல். (K-K-TPL – கொச்சி – கன்னியாகுமரி – தூத்துக்குடி குழாய் திட்டம். இதன் மூலம் கொச்சி எல்.என்.ஜி. முனையத்தில் இருந்து தூத்துக்குடி வரை சுமார் 424.65 கி.மீ. தூரம் குழாய்கள் பதிக்கப்படும். மண்ணின் தன்மைக்கு ஏற்ப 16, 14, 12.75 மற்றும் 8.625 அங்குல விட்டம் கொண்ட குழாய்கள் பயன்படுத்தப்படும்.
நாள் ஒன்றுக்கு 6.84 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் எரிவாயுவை வழங்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தொழிற்சாலைகளுக்கான எரிபொருள் மற்றும் வீடுகளுக்கான சமையல் எரிவாயு தடையின்றி நேரடியாகக் கிடைக்கும். எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் போன்ற சிக்கல்களில் இருந்து மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
இதற்கான ஏல நடைமுறைகள் முடிந்து, கடந்த மார்ச் 9-ஆம் தேதி அங்கீகாரக் கடிதம் வழங்கப்பட்டது. இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் யோஹான் குமார் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை வாரியச் செயலாளர் அஞ்சன்குமார் மிஸ்ரா ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.


