கவிஞர், நாடக பாவலர், இசை அமைப்பாளர், திரைப்பட முன்னோடி, சமூக சீர்திருத்தவாதி என பல தளங்களில் சிறப்பாக தடம் பதித்தவர். தமிழ் புலமை மிக்க இவர் விடுதலை போராட்ட காலங்களில் தம் நாடக பாடல்களால் அனைவரது மனங்களையும் வசீகரித்தவர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் தாலுகாவில் நாகலாபுரம் அருகிலுள்ள பள்ளிவாசல்பட்டி என்னும் கிராமத்தில் 1892ம் ஆண்டு ஜீன் 6ம் நாள் முத்தாண்டித்தேவர்&இருளாயி தம்பதிகளுக்கு மகானாகப் பிறந்தார். இவரது இயற்கை பெயர் வெள்ளைச்சாமி.
நான்காம் வகுப்பு வரை நாகலாபுரத்தில் படித்த பாஸ்கர தாஸ் தன் பாட்டியின் ஊரான மதுரைக்கு சென்று சுண்ணாம்புக் கார தெருவில் வாழ்ந்தார். அங்குள்ள மக்களுடன் கட்டிட வேலைக்கு சென்ற பாஸ்கரதாஸ் அவர்களது தொடர்பால் தெருக்கூத்து, நாடகம் முதலியவற்றில் ஈடுபாடு கொண்டார்.
பின்னர் தம் இளம் வயதில் திருப்பரங்குன்றத்தில் ஒரு நாள் கட்டிட வேலை முடித்து தூங்கும் பொழுது கனவில் முருகக் கடவுள் தோன்றி “எப்போதும் நான் உனக்கு உதயமாவேன், நீ எழுது! உனக்கு கவிகள் வரும்” என்று சொன்னதாக பாஸ்கரதாஸே தம் பிள்ளைகளிடம் சொல்லியுள்ளார். இதன் பிறகே கவிதைகள் எழுதுவதில் இவர் மிகுந்த ஆர்வம் கொண்டாராம்.
பாஸ்கரதாஸ் இளம் வயதிலேயே பாடல்கள் எழுதுவதிலும், பாடுவதிலும் சிறந்த ஆற்றல் பெற்றிருந்தார். இதையறிந்த ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி, வெள்ளைச்சாமியின் கவியாற்றறை புகழ்ந்து அவரை தன் அரண்மனைக்கு அழைத்து சென்று பாராட்டி “முத்தமிழ் சேத்திர மதுர பாஸ்கர தாஸ்” என்ற பெயரை சூட்டினார். இதே போல் எட்டையபுரம் மகராஜாவும் பாஸ்கரதாசின் கவியாற்றலை புகழ்ந்து பாராட்டி பல நிலங்களை கொடுத்துள்ளார்.
எட்டையபுரம் மன்னரால் பாஸ்கரதாசுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் தற்போதும் நாகலாபுரம் பேரூந்து நிலையம் அருகில் கடைகள் சூழப்பட்டு காணப்படுகிறது. மேலும் பாஸ்கரதாஸ் அப்பகுதியில் ஊர் மக்களுக்காக ஒரு நல்ல தண்ணீர் கிணறும் வெட்டிக் கொடுத்துள்ளார். தற்போது அக்கிணறு “அய்யாக் கிணறு” என அழைக்கப்படுகிறது.
ஆங்கிலேயரின் அதிகார அடக்குமுறை உச்சநிலையில் இருந்த காலத்தில் வந்தேமாதரம் உச்சரித்தாலே தடியடிதான். குறிப்பாக விடுதலை போராட்டம், விடுதலை வீரர்களை பற்றி பாடினால் சிறை தண்டனைக்கு ஆளாகும் நிலை இருந்தது. இத்தருணத்தில் பாஸ்கரதாஸின் பெரும்பாலான பாடல்கள் விடுதலைப் போராட்டத் தலைவர்கள், போராட்ட இயக்கங்கள், நிகழ்வுகள் பற்றியதாகவே இருந்தன. அதிலும் இவர் தம் எல்லா பாடல்களிலும் துணிச்சலுடன் தன் பெயரை பதித்திருக்கிறார். பாஸ்கரதாஸ் எழுதிய நாடகப் பாடல்களின் தொகுப்பாகிய “இந்து தேசாபிமானிகள் செந்தமிழ்த் திலகம்” இரண்டு பாகங்கள் முறையை 1928, 1935 களில் வெளிவந்தன. அவரது மனதிலும் வெகுவாக பதிந்த இப்புத்தகம் 1935ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது.
சென்னை எஸ்பிளனேட் எனுமிடத்தில் சுமார் 2500 பேர் அமர்ந்து நாடகம் பார்க்கும் வசதியுள்ள ஒரு பெரிய திரையரங்கம் இருந்தது. இதில் ஒரு முறை பாஸ்கர தாசின் பாஞ்சாப் படுகொலை பாடல்கள் பாடப்பட்ட போது கொதித்தெழுந்த ஆங்கில அரசு அத்தியேட்டரின் உரிமத்தை 1928ல் ரத்து செய்தது. பின்னர் தியேட்டர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
பாஸ்கரதாசின் பாடல்கள் மேடைகளில் பாடியவர்களின் மீது 144 தடைச் சட்டம் பாய்ந்தது. இதற்கிடையில் ஒரு கட்டத்தில் தம் பாடல்களால் ஆங்கில அரசின் நெருக்கடிக்கு ஆளான பாஸ்கரதாஸ், புதுவையில் மூன்று மாத காலம் தலைமறைவாக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.
பாஸ்கரதாஸின் நாடகப் பாடல்களை பாடியதற்காக பல முறை சிறைத் தண்டனை பெற்றவருள் எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் முதன்மையானவர். இதன் பிறகு டி.எம். காதர் பாட்சாவும், எம்.ஆர்.கமல வேணியும் அதிக முறை சிறை சென்றுள்ளனர்.
ஒரு முறை போடி நாயக்கனூரில் நாடக நடிகரும் ஆர்மோனிஸ்ட்மான காதர் பாட்ஷா மேடையில் தோன்றி பார்வையாளர்கள் விரும்பியபடி பாஸ்கரதாசின் “கொக்கு பறக்குதடி” பாடலை பாட முயற்சித்தார். அதை கண்ட போலிஸார் காதரை கைது செய்ய முயன்றனர். இதனால் மக்களில் பலர் “பாடிய பின் கைது செய்” எனக் கண்டனக் குரல் எழுப்பினர். பின்னர் பாடலைப் பாடி முடித்த காதர் பாட்சாவின் பாதத்தை ஏராளமான மக்கள் தொட்டு வணங்கினர். கடைசியாய் காதர் பாட்சா கைது செய்யப்பட்டு அன்றிலிருந்து மக்களால் “கொக்கு காதர் பாட்சா” என்று அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் பாஸ்கரதாசின் பல பாடல்களை பாடிய எம்.ஆர்.கமல வேணியின் வீடு 1942ம் ஆண்டு மாற்று உடையில் வந்த இரு போலிசாரால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. அங்கு சில பத்திரிக்கைகளைக் கைப்பற்றியதோடு நாடக பாடல்களை மறைத்து வைத்திருந்த கமலவேணியும் கைது செய்யப்பட்டு ஈரோடு சிறையில் அடைக்கப்பட்டார். ஆங்கிலேய அரசின் மூன்று மாத விசாரனையின் போது என்னென்ன பாடல்கள் பாடினாய்? என்று கேட்க, “கதர் கப்பல் கொடி தோணுதே”, “அண்டம் கிடுகிடுங்க லண்டன் நடுநடுங்க” முதலிய பாஸ்கர தாஸ் பாடல்களை பாடியதாக கூறினார். கோபமுற்ற அரசு வக்கீல் “நீ மது உண்டு நடித்த பொழுது தவறுதலாக அப்பாடல்களை பாடிவிட்டதெனக் கூறு” எனச் சொல்லியும் கமலவேணி உறுதியோடு மறுத்துவிட்டார். இதனால் ஒன்பது மாத சிறை வாழ்வை தன் ஒன்றரை வயது ஆண்குழந்தையோடு கழித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
பாஸ்கர கான சபா, பால கந்தர்வகான சபா மற்றும் மதுரை சங்கீத வித்வ நாடக சமாஜம் முதலியவற்றிற்கு ஆசிரியராக இருந்து நாடகம் சொல்லி கொடுத்ததுடன் சங்கீத பயிற்சியும் அளித்துள்ளார் பாஸ்கரதாஸ். மேலும் இவர் அன்றைய நெல்லை மாவட்டத்தின் நாகலாபுரம் பாய்ஸ் கம்பெனி, நாகலாபுரம் முதலிமார் நாடக சபா உட்பட பல சபாக்களுக்கு புதிய பெயரினை சூட்டி அவைகளின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்துள்ளார்.
பாஸ்கரதாஸ் மற்றும் லெஷ்மணதாஸ் போன்ற பல இளைஞர்களின் உழைப்பால் தான் தமிழ் நாடக நடிகர் சங்கம் மதுரையில் 1920ம் ஆண்டு மே 30 ல் ஆரம்பிக்கப்பட்டது. சங்க செயலாளர் கே.டி.நடராஜப் பிள்ளை வீட்டில் 10.09.1931ல் நடைபெற்ற சங்க கூட்டம் ஒன்றில் சங்கத் தலைவரான பாஸ்கரதாஸ் முன் வைத்த சங்கக் கொள்கைகளான நடிகர் முன்னேற்றம், தேசத் தொண்டு, கதர்ப்பிரச்சாரம், மதுவிலக்கு, தீண்டாமை முதலியவை சங்க உறுப்பினர்களால் ஏக மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன் பிறகு 1931ம் ஆண்டு அக்டோபர் 9ல் மதுரையில் நடிகர் சங்க முதலாவது மாநாடு பாஸ்கரதாஸ் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அக்காலத்தில் பாஸ்கரதாஸ் பாடல்கள் தமிழகம், ரங்கூன், இலங்கை, பர்மா எனப் பல இடங்களில் பிரபலமாக இருந்தது. பதினொரு நாடகங்களை இயற்றியுள்ள பாஸ்கரதாஸ் மூலம் முதன் முதலாக நாடக சபாக்கள் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது.
1931ல் வெளிவந்த முதல் தமிழ், தெலுங்கு பேசும் படமான காளிதாஸ் முதற்கொண்டு பல திரைப்படங்களுக்கு பாஸ்கரதாஸ் பாடல்கள் இயற்றியுள்ளார். வள்ளித்திருமணம், பிரஹலாதா, சுலோசனாபதி, திரௌபதி வஸ்திராஹரன், ராதாகிருஷ்ணன் சதி அகல்யா, சாரங்கதாரா, ராஜாதேசிங்கு, ராதா கல்யாணம் உள்ள பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொடுத்துள்ளார். மேலும் இதனுடன் நடிகர்& நடிகைகளுடன், சங்கீதம், சொல்லிக் கொடுத்ததையும் அவரது நாட்குறிப்புகளின் மூலம் அறிய முடிகிறது.
பாடல்கள் எழுதினார்
பாஸ்கரதாஸ் பல்வேறு கிராமபோன் கம்பெனிகளுக்கு பாடல்கள் எழுதிக் கொடுத்து அவற்றை பல கலைஞர்களை கொண்டு பாடவும் வைத்துள்ளார். சென்னை பி&ராட்வே சாலையில் உள்ள உறிஸ் மாஸ்டர் வாய்ஸ் கிராமபோன் கம்பெனியில் மாதம் ரூ 120 ஊதியத்திற்கு பணியாற்றியுள்ளார். மேலும் ஓடியான் கிராமபோன், கொலம்பியா மியுசிகல் புராடக்ட்ஸ், பெங்களூர் மாஸ்டர் வாய்ஸ் போன்ற கம்பெனிகளுக்கும் பாடல்களுக்கு எழுதிக் கொடுப்பது, பாடகர்களை ஒப்பந்தம் செய்து பாட வைப்பது, போன்ற பணிகளை செய்துள்ளார்.
பாஸ்கரதாஸ் பாடல்களில் ஐநூறுக்கு மேற்பட்டவை கிராமபோனில் பதிவாகியுள்ளன. இவற்றில் நூற்றுக்கு மேற்ப்பட்ட நாடக பாடல்களும் உள்ளன. டி.எஸ்.வாசுவாம்மாள், எம்.எஸ்.சுப்புலெட்சுமி, ஏ.சுந்தராம்பாள், கே.பி.சுந்தரம்பாள், எம்.எஸ். விஜயன், எம்.எஸ்.விஸ்வநாததாஸ், டி.எஸ்.கிட்டப்பா போன்ற பல கலைஞர்களுக்கு கிராமபோனில் பாட, பாடல்கள் எழுதிக் கொடுத்துள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாததாஸ், காதர் பாட்சா, சுப்பையா பாகவதர், நாகசாமி பாகவதர், அப்துல் காதர், கமலவேணி, கண்ணம்மாள், பி.எஸ்.சிவபாக்கியம் என எண்ணற்ற நாடக நடிகர்& நடிகைகள் தாஸின் நாடகப் பாடல்களுக்கு மேடையில் உயிர் கொடுத்துள்ளார். இவர் மதுரையில் அனுமந்தராயன் கோவில் தெருவில் வசிக்கும் போது அதே தெருவில் வாழ்ந்த இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலெட்சுமியும் பாஸ்கரதாசிடம் பாடல்களைக் கேட்டுள்ளராம்.
தேசிய விடுதலை, பஞ்சாப் படுகொலை, காந்தியின் தியாகம், பகத்சிங் வீரம், தீண்டாமை ஒழிப்பு என அடுக்கடுக்கான உணர்வு சூழல் கொண்ட இவரது பாடல்களினால் மக்கள் மனங்களில் புரட்சி தீ பரவியது. அன்றைய தேநீர் கடைகளில் அதிகம் கேட்கப்படும் பாடல்களில் பாஸ்கரதாஸின் பாடல்களும் இருந்தன. அன்றைய ரயில்வே பிளாட்பாரங்களிலும், தெருவோரங்களிலும் அனாதைகள் பாஸ்கரதாசின் பாடல்களை பாடியபடி யாசகம் செய்வார்கள் என்ற செய்தி இப்போதும் நம்மை அதிர வைக்கிறது. அவரை “பிச்சைக்கொரு பாஸ்கரதாஸ்” என அழைப்பதும் வழக்கில் இருந்துள்ளது.
தன்னை தேடி வருபவர்களை கதராடை கொடுத்து வரவேற்கும் வழக்கமுள்ள பாஸ்கரதாஸ் எங்கு சென்றாலும் புஷ்ப தாம்பூல கதராடை மரியாதையுடன் தான் வரவேற்கப்பட்டுள்ளார் என்பதை அவரது நாட்குறிப்புகளின் மூலம் அறிய முடிகிறது.
இவர் பம்மல் சம்மந்த முதலியார், டி.கே.எஸ். சகோதரர்கள், தேவதாஸ் இயக்குநர் பி.வி.ராவ், மாடர்ன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரம், டாக்டர்.பி.டி.ராஜன் போன்றவர்களோடு நல்ல நட்பினை கொண்டிருந்தார். மேலும் நாதசுவர மேதை ராஜரத்தினம் பிள்ளை, என்.எஸ்.கே.ஜீவா, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவரது தந்தை உக்கிரபாண்டித் தேவர் முதலியவர்களோடு தொடர்ந்து உறவு வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.
தமிழகத்திற்கு வருகைபுரிந்த காந்தியடிகள், ஒரு முறை மதுரை வந்து நெல்லை ரெயிலில் ஏறினார். அப்போது பாஸ்கரதாஸ் ரயிலுக்கு வந்து காந்தியடிகளுக்கு மாலை ஒன்று அணிவித்து அவரிடம் தாம் இயற்றிய பாடல் புத்தகம் ஒன்றை கொடுத்தார். அதில் “காந்தியோ பரம ஏழை சந்நியாசி” என்ற பாடலின் பொருளை அருகிலிருந்த பி.டி.ராஜன் காந்திக்கு ஆங்கிலத்தில் விளக்கினார். இதை கேட்டதும் “உறம் கோயஸி நயா பனாயா” அதாவது, நம்மை சந்யாசியாக்கி விட்டார் எனக்கூறி சிரித்தார் காந்தியடிகள்.
மூன்று மனைவிகள் கொண்ட பாஸ்கர தாசுக்கு மொத்தம் 8 பெண் பிள்ளைகளும், 6 ஆண் பிள்ளைகளும் பிறந்தன. இவரது பேரன், கொள்ளு பேரன் என சுமார் 100 பேர் பல ஊர்களில் உள்ளனர்.
பாஸ்கரதாஸின் மகள் (சரஸ்வதி) வழிப் பேரன்களான தமிழ்ச்செல்வன், கோணங்கி, முருகபூபதி முதலியோர் சிறந்த படைப்பாளிகள் ஆவார். இவர்களில் முனைவர். முருகபூபதி நவீன நாடக படைப்பாளராவார். இதை போலவே “கல் குதிரை” என்ற இதழை நடத்தி வரும் இளங்கோவன் (எ) கோணங்கியும், த.மு.எ.ச.மாநில தலைவரான ச.தமிழ்ச்செல்வனும் தமிழகம் அறிந்த சிறந்த எழுத்தாளர்களாவர்.
இவர் பிறந்த நாகலாபுரத்துக்கு நாம் சென்றோம்.
நாகலபுரத்தில் பல அதிசயங்கள் இருந்தது.
வீரபாண்டிய கட்டபொம்மனை காப்பாற்றி சேதுபதி மன்னனிடம் அவரை அனுப்பிவிட்டு, அவரை போல உடையணிந்து வந்த தானாவதிப் பிள்ளை ஆங்கிலேயரால் தலைத் துண்டிக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டார். அந்த இடம் தற்போதும் நாகாலபுரத்தில் உள்ளது. அதே போல் இந்த ஊரில் உள்ள சிவன் கோயில் தல புராணம் மூலமாகத்தான் இந்த ஊருக்கு நாகம்+ அகால+ புரம் என்று பெயர் வந்தது. இதுவே மருவி நாகலாபுரம் என்று ஆனது.
அடுத்து நெல்லை மாவட்டம் தென்கோடியில் உள்ள இடையன்குடியில் வாசம் செய்த கிறிஸ்தவ பாதிரியார் கால்டுவெல் அய்யர் பெயரில் வணிக வளாகத்தினை பார்த்தேன்.
சூடாக ஏணி மிட்டாய் போட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். மொறு மொறு என்று இருந்தது அதைத் தின்றுக் கொண்டே அந்த ஊரை ரசித்துக்கொண்டிருந்தேன். ஒரு பக்கம் போனால் சென்னிக்குளம் வருகிறது. அந்த ஊர் காவடி சிந்து எழுதி உலக புகழ்பெற்ற அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஊர். இவரின் பாடல் ஐ.நா. சபையில் சுப்புலெட்சுமி அவர்களால் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதை தாண்டி போனால் கோவில் குமாரரெட்டிபுரம் என்ற ஊர் உள்ளது. அருமையான முருகன் கோயில் உள்ள ஊர்.
இங்கேயும் கழுகுமலையைப் போல தேர் ஓடுகிறது. இந்த இடத்தில் கோடைகாலத்தில் தேர்த்திருவிழா நடைபெறும் அது மிக பிரமாதமாக இருக்கும் என்றார்கள். அது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் காட்டினார்.
அதே நேரம் பாஸ்கரதாஸ் பிறந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று விசாரித்து அங்கே சென்றோம். பள்ளி வாசல் பட்டியை காட்டினார்கள். அந்த இடம் நாகலாபுரத்தினை ஒட்டித்தான் இருக்கிறது. ஆனால் தற்போது முள்செடி படர்ந்து காணப்படுகிறது.
இந்த ஊரில் எம்மதமும் சம்மதம் என்ற வகையில் மும்மத கோயில்களும் ஒன்று போல இருக்கிறது. ஆனால்… பாஸ்கர தாஸ் அவர்கள் அடக்கமான கல்லறை என்று அவர்கள் காட்டிய இடம் மட்டும் பராமரிப்பு இன்றிக் கிடக்கிறது.
“அண்டம் கிடுகிடுக்க” என அதிர செய்து வெள்ளையனை விரட்டிய அந்த தூத்துக்குடி மாவட்டத்தின் மகாத்மாவின் நினைவு சின்னம் இப்படியா இருக்க வேண்டும் என்று நினைத்தபோது வருத்தமாக இருந்தது. ஆனால் விரைவில் இவ்விடம் சிறப்பு பெரும் என்பதில் சந்தேகமில்லை.


