குலசேகரன்பட்டினம் அருகே புளியமரத்தில் தொங்கிய ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருகே செட்டியாபத்து கிராமம் ஐந்துவீட்டு சுவாமி நகரைச் சேர்ந்தவர் கருப்பன் மகன் உமையன் (55). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு ஆறுமுக கனி என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை உமையன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் இன்று காலை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள புளியமரத்தில் உமையன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்து குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா என்பது குறித்து இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


