கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, அஹமதாபாத் தேசிய புத்தாக்க மையம் மற்றும் நேஷனல் பொறியியல் கல்லூரி, தமிழ் நாடு பள்ளி கல்வித் துறை ஒருங்கிணைப்புடன், 2023-24 மற்றும் 2024-25-ம் கல்வியாண்டுகளுக்கான இன்ஸ்பயர்-மானக் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவங்களின் தலைவர் சென்னம்மாள் ராமசாமி தலைமை தாங்கினார்.
இதில் கனிமொழிஎம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் அமைச்சர் கீதாஜீவன், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சங்கீதா சின்னராணி, கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முகவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் கே.காளிதாச முருகவேல் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் பேராசிரியர் க.சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.
முன்னதாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி கிராமத்தில் மினி ஜவுளி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை தாங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். அப்போது சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி கலந்து கொண்டு ரூ.75 லட்சம் செலவில் புதியதாக மினி ஜவுளி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, ஓட்டப்பிடாரம் தாசில்தார் சண்முகவேல், யூனியன் ஆணையாளர் சசிகுமார், கூடுதல் ஆணையாளர் ஜவகர், ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா, முன்னாள் யூனியன் தலைவர் ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீரங்கபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


