கோவில்பட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் விருதுகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இன்று (29.11.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் (2023 – 24) மற்றும் (2024-25) ஆண்டிற்கான மாநில அளவிலான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் INSPIRE – MANAK (Million Minds Augmenting National Aspirations and Knowledge) போட்டிகளில் வெற்றிபெற்ற 38 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் தலைவர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் கோவி.செழியன் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்ததாவது : அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, புதுடெல்லி, தேசிய புத்தாக்க நிறுவனம், அகமதாபாத், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை மற்றும் நேஷனல் பொறியியல் கல்லூரி, கோவில்பட்டி இணைந்து நடத்தும் மாபெரும் புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் நிகழ்ச்சியானது, அறிவியல் வளர்ச்சியில் அடையாளம் காணப்பட்டு மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு, மாணவர்களின் கண்டுபிடிப்புகள் கண்காட்சியாக வைக்கப்பட்டு, எல்லோரும் பாராட்டும் வண்ணம் தேர்வு செய்யப்பட்டு, ஊக்கப்படுத்தி பரிசு வழங்குகின்ற சிறப்பான நிகழ்வாக நடைபெற்றுள்ளது. 6 ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் இளம் மாணவர்களுடைய அறிவியல் ஆர்வத்தை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி, ஏழை எளிய மாணவர்கள் விருது பெறும் இந்த நிகழ்ச்சி 2009ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி இன்றைக்கு வரை சிறப்பான முறையில் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம்.
தற்போது 2023-2024 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது 991 மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2024-2025 ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது 1197 மாணாக்கர்கள் பெறக்கூடிய அளவிற்கு உயர்ந்துள்ளது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு, புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு, வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று புகழப்பட்ட தமிழ்நாடு, அறிவியலிலும் சிறந்த தமிழ்நாடு என்று வளர்ச்சி அடைகிற முயற்சியில் தான் இங்கு மாநிலம் முழுவதிலும் இருந்து மாணாக்கர்கள் வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த “புத்தாக்க அறிவியல் ஆய்வு என்பது மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி மட்டுமல்ல மாணவர்களின் அறிவியல் திறன்களை வெளிக்கொண்டுவரும் அரிய முயற்சி. மாணாக்கர்களின் ஒவ்வொரு புதுமையும், சிந்தனையும், நாளைய தமிழ்நாட்டின் தூண்களாக விளங்க வேண்டும். மூடநம்பிக்கைகளுக்கு ஏன்? எதற்கு? எப்படி? போன்ற கேள்விகளின் தேடல்களை ஒருங்கிணைத்தது தான் இந்த “புத்தாக்க அறிவியல் ஆய்வு” திட்டத்தின் நோக்கம்.
மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து உரிய அங்கீகாரம் கொடுப்பதே இத்திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும். 2009-இல் தொடங்கிய இத்திட்டம் மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை தேசிய அளவில் காட்சியமைத்து, வளர்ச்சி பாதையை நோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான் தமிழ்நாடு அரசின் திட்டம். இந்த கண்காட்சியில் மாணவர்களின் படைப்புகள் ஒவ்வொன்றும் நம் மாணவர்கள், அறிவியலை எவ்வளவு ஆழமாக புரிந்து கொண்டுள்ளனர் என்பதைச் மிக தெளிவாக எடுத்துரைக்கிறது. நேற்றையதினம் நடைபெற்ற கண்காட்சியினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்களும் பார்வையிட்டு, உங்களை உற்சாகப்படுத்தினார்கள்.
உண்மையான கல்வி என்பது புதுமை, ஆராய்ச்சி, தொழில்நுட்பம், தொழில் முனைவோர் திறன், சமூக முன்னேற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இங்கே இருக்கும் ஒவ்வொருவரிடமும் எதிர்காலத்தின் விதை இருக்கிறது. அந்த விதை என்ன? அதை எப்படி விருட்சமாக்குவது? அதை சிந்திப்பது எப்படி? அதை செயல்படுத்துவது எப்படி? என்பதை கண்டறிந்து, மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட நீங்கள் தேசிய அளவிலும் மற்ற மாநிலங்களுடன் கலந்து கொண்டு இளம் அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசை தமிழ்நாடு பெற வேண்டும். அதுதான் தமிழ்நாட்டுக்கு பெருமை. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஊக்கப்படுத்துகின்ற பொழுது தான், எதிர்காலத்தில் மற்றொரு அப்துல்கலாம் –ஆக மாறுவதற்கு இது போன்ற அறிவியல் கண்காட்சி வழிவகை செய்யும், மேலும் தொடரும்.
நகரத்தில் படித்து வெற்றி பெறுவதை விட குக்கிராமத்தில் படித்த ஒரு மாணவன் வெற்றி பெற்றால் இந்த அறிவியல் கண்காட்சியின் அடிப்படை நோக்கம் வெற்றி பெறுவதாகும். எல்லோருக்கும் எல்லாம், அனைவருக்கும் அனைத்தும் என்பது தான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவு. படித்த, பணக்கார, அறிவியல் சார்ந்த மற்றும் உயர்பதவியில் இருக்கின்றவர்களின் குழந்தைகள் என்ன சாதிக்கின்றார்களோ, அதையே எளிய குடும்பத்தை சார்ந்தவர்களின் குழந்தைகளும் சாதிக்க வேண்டும் என்று எண்ணுகிற முதலமைச்சர் நமது தமிழ்நாடு முதலமைச்சர்.
தமிழ்நாடு அரசு எப்போதும் கல்வியை ஊக்குவிக்கும் முயற்சியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. மாணவர்கள் ஆராய்ச்சியிலும், புதுமையிலும், உலகத்தரத்தில் பங்கேற்க வேண்டும் என்பது நமது தமிழ்நாடு முதலமைச்சரின் நோக்கமாகும். பள்ளிக் கல்லூரியை கடந்தும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
பள்ளி படிப்பு முடித்த பிறகு உயர்கல்விக்கு செல்லும்போது என்ன படிக்கலாம்? எங்கே படிக்கலாம்? என்ன செய்வது? என்று வழிகாட்டுவதற்கான நான் முதல்வன் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம், பெண் கல்வியினை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், முதல்பட்டதாரி மாணவர்களுக்கு அனைத்து கல்வி சலுகைகளையும் அரசு ஏற்கும் என்ற திட்டம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும், பள்ளிகல்வி, உயர்கல்வி, அறிவியல் தொழில்நுட்ப மையம் உள்ளிட்ட கல்விக்காக எதை கேட்டாலும், அதற்கான நிதியை ஒதுக்குகின்றவர் தான் நமது தமிழ்நாடு முதலமைச்சர் .ஆகவே, இந்தியாவில் தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடத்தில் இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் அவர்தான்.
மாணவர்களின் கல்வி மேம்பாட்டையும், அறிவியல் ஆர்வத்தையும் வளர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. மாணவர்களே, உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். வறுமை என்பது கல்விக்கு தடையில்லை. கிராமப்புறம் என்பது அறிவியல் ஆராய்ச்சிக்கு தடையில்லை. குக்கிராமம் என்பது முன்னேற்றத்திற்கு தடையில்லை.
மனதில் உதிக்கின்ற உத்வேகம், முயற்சி, விடாமுயற்சி, அவைகளை வெற்றி கொண்டால், எதையும் எதிர்கொள்ளுகின்ற ஆற்றல் உங்களுக்கு வரும். நான் தஞ்சை மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில், ஏழை எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி படிப்பை தொடங்கி, அரசு பள்ளியில் உயர்கல்வி முடித்து, கும்பகோணம் கல்லூரியில் பி.ஏ படிப்பு பயின்று சென்னை சட்டக்கல்லூரியில் பி.எல் பட்டம் பெற்று, அண்ணாமலை பல்கலைகழகத்தில் 2 எம்.பி.ஏ பட்டம் பெற்று, பச்சையப்பன் கல்லூரியில் எம்.பில் பட்டம் பெற்று, சென்னை பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றேன்.
எந்தவொரு பொருளாதார பின்னணியும், நகர்ப்புற பின்னணியும், பட்டதாரி பெற்றோர்களாக இல்லாத நான் பட்டம் பெற்று இன்றைக்கு உங்கள் முன்னால் உயர்கல்வித்துறை அமைச்சராக நிற்கிறேன் என்றால் அது முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட முதல் பட்டதாரிகளுக்கு அனைத்து சலுகையும் உண்டு என்ற திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தொண்டன் நான்.
இன்னும் பல ஊக்கத்தையும், அறிவியல் ஆராய்ச்சிகளையும் கண்டுபிடித்து, தமிழ்நாட்டு மாணவர்கள் மற்ற மாநிலங்களுடன் போட்டி என்பதை விட உலக நாடுகளுக்கு இணையாக போட்டியிடுகின்ற அறிவியலையும், ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. அதனை நிறைவேற்றி தரவேண்டும் என்று விரும்புகிறேன். மேலும் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்து வந்திருக்கக்கூடிய உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நீங்கள் பெறுகின்ற பரிசு என்பது முடிவல்ல, தொடக்கம். இன்னும் பல பரிசுகள் நீங்கள் பெற வேண்டும். உலகத்தில் உள்ள தலைசிறந்த விஞ்ஞானிகள், அறிவாளிகள் உங்கள் ஆற்றலை கண்டு வியக்கக்கூடிய வகையில் அறிவியலை வளர்ப்போம், இளம் விஞ்ஞானிகளாக, ஆராய்ச்சியாளராக, அறிவியலாளராக வாருங்கள்! இன்னும் பல வெற்றிகளை தாருங்கள்! என்று வாழ்த்துகிறேன் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்கள்.
2023-24 மற்றும் 2024-25 கல்வி ஆண்டுகளுக்காக, தமிழகத்தின் 38 மாவட்டங்களை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் மற்றும் பிற பள்ளிகளில் இருந்து 2,188மாணவர்கள் தல ரூ.10,000/-வழங்க தேர்வு செய்யப்பட்டனர். இந்நிதியுதவியின் அடிப்படையில் மாதிரிகளை உருவாக்கி,2025 அக்டோபரில் தொடங்கி நவம்பர் முதல் வாரம் வரை ஆன்லைன் வாயிலாகநடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். இதில் 222 மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த மாநில அளவிலான நிகழ்வில் அறிவியல் மாதிரி கண்காட்சிகள், திட்ட விளக்கங்கள், நிபுணர்களின் அமர்வுகள் மற்றும் துறைத்தெரிவாளர்களின் மதிப்பீடுகள் இடம்பெறும். தமிழ்நாட்டை தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்தம் நோக்கில், விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்களால் அமைக்கப்பட்ட குழு, இக்கண்காட்சியில் இருந்து சிறந்த 20மாணவர்களை தேர்வு செய்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்றையதினம் உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் தலைவர் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பமையம், .கோவி.செழியன் விருதுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் (மு.கூ.பொ) கே.சண்முகசுந்தரம், அகமதாபாத்தில் உள்ள தேசிய புத்தாக்க நிறுவனத்தின் உதவி ஆராய்ச்சியாளர் பி.மெரின் டயானா, புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதின் ஒருங்கிணைப்பாளர் தேவேந்திர திவாரி, நேஷனல் பொறியியல் கல்லூரியின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், கல்லூரியின் இயக்குனர் .எஸ்.சண்முகவேல், கல்லூரி முதல்வர் .கே.காளிதாசமுருகவேல், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


