கோவில்பட்டி சிதம்பராபுரம் பகுதியிலுள்ள உரக்கிடங்கில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் சிதம்பராபுரம் பகுதியில் கோவில்பட்டி நகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் உரக்கிடங்கில் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு கொட்டப்பட்டுள்ள குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரித்து அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இன்று (29.11.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிறப்பு நிலை நகராட்சியான கோவில்பட்டி நகராட்சியில் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 100998 மக்கள் வசித்து வருகின்றனர். இந்நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. இந்நகராட்சியில் நாள்தோறும் சுமார் 33 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு சிதம்பராபுரம் உரக்கிடங்கில் கொட்டப்படுகிறது. இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கப்படுகிறது.
இதில் மக்கா தன்மையுள்ள குப்பைகள் பயோ மைனிங் (Bio Mining) முறையில் அகற்றப்பட்டு வருகிறது. மேலும், கூடுதலாக குப்பைகளை தரம் பிரிக்கும் ஒரு இயந்திரத்தினை நிறுவி திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், அறிவுறுத்தினார். ஆய்வின்போது, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, நகராட்சி ஆணையாளர் கமலா, நகராட்சி பொறியாளர் சனல்குமார், வட்டாட்சியர் சரவண பெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.