முன்னீர் பள்ளம் கவுன்சிலர் செல்வ சங்கர் வீரபாண்டி செல்லாயி அம்மன் வரலாற்றை கூறும் முன்பு மும்பை சேட் பரமசிவ தேவர் வரலாற்றை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அந்த வரலாற்றை இனி காண்போம்.
இதே ஊரை சேர்ந்த பரமசிவ தேவர். இவர் சிறு வயதிலேயே திரைகடல் ஓடி திரவியம் தேடு என்பதற்கு இணங்க மும்பை சென்றார். அங்கே வாஷி நாக்கா என்ற பகுதியில் வாழ்ந்து வந்தார். பல்வேறு தொழில்களை செய்து அங்கு முன்னேறினார். அவர் தீவிர முருக பக்தர். ஆனாலும் பிள்ளை யார் மீது அவருக்கு தீவிர பற்று. மும்பையில் திலகர் காலத்தில் சுதந்திர போராட்டத்திற்காக துவங்கப்பட்ட கண்பத்தி எனும் கணபதி விழா மிகச்சிறப்பாக நடைபெறும். அவ்விழாவின் போது தாயகத்தில் இருந்து வில்லிசை, நையாண்டி மேளம் , கரகாட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சியை 11 நாளும் நிகழ்த்துவார்கள். அதை கண்ட சேட் பரமசிவ தேவர், இதைப்போலவே நமது ஊரிலும் நடத்த வேண்டும் என ஆசைப்பட்டார்.
பெரும் பாலுமே பலர் ஆசைப்படுவர். ஆனால் அதை நிறைவேற்ற இயலாது. ஆனால் இவர் தளராமல் பணி செய்தார். அதோடு மட்டுமல்லாமல் தாயகத்தில் தான் பிறந்த ஊரான கீழ முன்னிர் பள்ளத்துக்கு வந்தவர், இங்கே உத்திர சொக்க விநாயகர் என்ற கோயிலை உருவாக்கினார்.
அதோடு மட்டுமல்லாமல் 1974 ஆம் ஆண்டில் இருந்து இந்த கோயிலில் கணபதி விழாவை மிகச்சிறப்பாக கொண்டாட ஆரம்பித்தார்.
குறிப்பாக இந்த நிகழ்ச்சிய மும்பையில் நடப்பது போலவே 11 நாள் விழாவாக கொண்டாடப் பட்டது. இதற்காக ஒவ்வொரு நாளும் பல கலைஞர்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துவார்.
தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து தினசரி பூஜை செய்து 11 வது நாள் தாமிபரணியில் பிள்ளையார் சிலை கரைக்கப்படும். அந்த காலத்தில் சிலம்பாட்டம் , கரகாட்டம், நையாண்டி மேளம், வில்லிசை என பல்வேறு நிகழ்ச் சிகளை தொடர்ந்து நடத்துவார். சினிமா கச்சேரி நடை பெறும். இதற்காக சினிமா பிரபலங்களை அழைத்து வருவார். அதோடு மட்டுமல்லாமல் இரண்டு செட் நையாண்டி மேளங்களையும் வைத்து நிகழ்ச்சி நடத்துவார்.
இவரது நிகழ்ச்சியில் பிரபலங்களும் கலந்துகொள்வார்கள். இதன் மூலம் மக்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் நெருக்கத்தை உருவாக்குவார். குறிப்பாக முன்னாள் சபாநாயகரும், மேலச்செவலை சேர்ந்தவருமான செல்லப்பாண்டியன் அவர்கள் ஆண்டு தோறும் இந்த கோயில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
முன்னீர் பள்ளத்தினை பொறுத்தவரை திமுகவை சேர்ந்தவர்கள் மிக அதிகமாக இருப்பார்கள். அந்த காலத்தில் அ.தி.மு.க வில் சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்கு கீழ முன்னிர் பள்ளம் விநாயகர் சதுர்த்து விழாவிற்கு வருகை தந்தார்.
அந்த காலம் பாளையங் கால்வாயில் தண்ணீர் இல்லை. தற்போது போல தாமிரபரணி ஆற்றில் இருந்து பைப் மூலம் வீடுகளுக்கு தண்ணீர் வராத காலமாக இருந்தது. எனவே பாளையங் கால்வாயில் தண்ணீர் வராத காரணத்தினால் குடிதண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. கால்நடைகள் கூட தடுமாறியது . ஜீன் மாதம் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவார்கள். ஆனால் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி வந்தும் கூட தண்ணீர் இல்லை. எனவே பெண்கள் உள்பட ஊர் மக்கள் பி.எச் பாண்டியனை அணுகி, எங்களுக்கு பாளையங்கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அவரும் மக்களை பார்த்து, “நாளைக்கு காலையில் பாளையங் கால்வாயில் தண்ணீர் வந்து விடும் கவலைப்படாதீர்கள்” என்று கூறிவிட்டார்.
அனைவருக்கும் ஆச்சரியம். அது எப்படி ஒரே நாள் இரவில் தண்ணீர் தரமுடியும். சும்மா பொய் சொல்லுகிறார் என அவரை கேலி செய்தனர். திமுக காரர்கள் அதிகமாக இருக்கும் ஊர் எனவே அதிமுகவை சேர்ந்த பி.எச். பாண்டியன் எப்படி உதவுவார் என்றும் நினைத்தனர்.
ஆனால் மறு நாள் காலையில் எழுந்து மக்கள் பார்த்த போது பாளையங்கால்வாயில் தண்ணீர் வந்து விட்டது. அனைவரும் ஆச்சரியமுற்றனர். அவர் சொன்ன வாக்கை காப்பாற்ற வேண்டும் என இரவோடு இரவாக பொதுப் பணித்துறை அதிகாரிகளை அழைதது வந்து பாளையங் கால்வாயில் மிக அதிகமான தண்ணீரை திறந்து அதிகாலையில் முன்னீர்பள்ளத்தில் தண்ணீர் வர ஏற்பாடு செய்துள்ளார்.
அதன் பிறகு பி.எச்.பாண்டியன் மீது மக்களுக்கு மதிப்பு மரியாதை கூடியது.
தற்போது கீழ முன்னீர் பள்ளத்தில் உள்ள உத்திர சொக்க விநாயகர் கோயிலை பாக்க சென்றோம். அங்கே ஒரு கல்வெட்டை பார்த்தோம். அதில் 2006 ஆம் ஆண்டு கீழ முன்னீர் பள்ளம் ஊர் பொதுமக்கள் சேர்ந்த திருமதில் சுவரை திருப்பணி செய்துள்ளார்கள். உள்ளூர் பிரமுகரான மதுரம் ஹோட்டல் உரிமையாளர்கள் இந்த கோயிலுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்துள்ளார்கள்.
இந்த கோயிலை பார்க்கும் போது அந்த காலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மிகப்பிரமாண்டமாக நடந்த நிகழ்ச்சி எங்கள் கண் முன் வந்து நின்றது. கவுன்சிலர் செல்வ சங்கர் பேசும் போது சேட் பரமசிவ தேவரை மிகவும் புகழ்ந்து பேசினார்.
இந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் தான் பரமசிவ தேவர் தனது 80 வயதில் அதாவது 2004 ஆம் ஆண்டு இறந்தார். அவரின் பூத உடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டது என்று சொல்வதை விட விதைக்கப்பட்டது என கூறலாம்.
இவர் இறந்த நாள் ஒரு விசேஷம் நடந்தது. அன்றுதான் நான் வசிக்கும் செய்துங்கநல்லூரில் எனது வார்டில் கவுன்சிலராக இருந்த வேம்பு துரை அவர்களின் மனைவி சுந்தரிக்கு வளைகாப்பு நடந்துள்ளது.
கீழ முன்னீர் பள்ளத்தில் இருந்து அவரது மகள் லெட்சுமியை செய்துங்கநல்லூர் கஸ்பா வேளாளர் தெருவில் வசிக்கும் முனியாண்டி என்பருக்கு மணமுடித்து கொடுத்து இருந்தார்கள். அந்த தம்பதியின் மகள் தான் சுந்தரி என்பது குறிப்பிடத்தக்கது.
என்னோடு வந்த வியாபாரி சங்க தலைவர் ஐயப்பன் இந்த தகவலை அப்போது கூறி மகிழ்ந்தார். எனவே வேம்பு துரை மூலமாக பரமசிவ தேவரின் புகைப்படத்தினை வாங்கி இந்த பக்கத்தில் பிரசுரம் செய்துள்ளேன்.
அடுத்து முன்னீர்பள்ளம் கவுன்சிலர் செல்வ சங்கர் வீரபாண்டி செல்லாயி அம்மன் வரலாற்றை நம்மிடம் கூற ஆரம்பித்தார்.
(நதி வற்றாமல் ஓடும்)


